• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

ஏதென்சில் பவுல். இன்றைய இறைமொழி. புதன், 13 மே 2026.

Wednesday, May 13, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
புதன், 13 மே 2026
பாஸ்கா ஆறாம் வாரம்
புனித பாத்திமா அன்னை, நினைவு
திப 17:15, 22-18:1. யோவா16:5-11

 

ஏதென்சில் பவுல்

 

இன்று நாம் அன்னை கன்னி மரியாவை, ‘புனித பாத்திமா அன்னை’ என்று கொண்டாடி மகிழ்கிறோம்.

 

‘பாத்திமா அன்னை’ என்னும் பெயர் போர்த்துகல் நாட்டில் உள்ள பாத்திமா என்னும் நகரின் பெயர். அன்னை கன்னி மரியாவின் தலைப்புகள் அவர் காட்சியளித்த இடங்களின் பெயர்களோடு இணைந்தும் வழங்கப்படுகின்றன. லூர்து அன்னை, வேளாங்கண்ணி அன்னை போல, பாத்திமா அன்னை.

 

1917-ஆம் ஆண்டு 13 மே முதல் 13 அக்டோபர் வரை ஆறு முறை அன்னை கன்னி மரியா பாத்திமாவில் லூசியா, பிரான்சிஸ்கோ, மற்றும் ஜெசிந்தா என்னும் மூன்று இளவல்களுக்குக் காட்சி தந்துள்ளார்.

 

‘கதிரவனை விட அதிகமாக ஒளிவீசிய பெண் ஒருவர் உலக அமைதிக்காக செபமாலை செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்’ – இதுவே இளவல்கள் தங்களுக்குக் காட்சியில் சொல்லப்பட்டது என வெளிப்படுத்தினார்கள்.

 

13 அக்டோபர் 1917 அன்று நடந்த கதிரவன் அற்புதம் (சுழன்று சென்ற கதிரவன்) முக்கிய நிகழ்வாகப் பேசப்படுகிறது.

 

இளவல் லூசியா சில வருடங்கள் கழித்து ‘பாத்திமாவின் மூன்று இரகசியங்கள்’ பற்றிப் பேசத் தொடங்கினார். முதல் இரகசியம், நரகம் பற்றியதாகவும், இரண்டாம் இரகசியம், அமல உற்பவ அன்னைக்கு அர்ப்பணித்தல் பற்றியதாகவும், மூன்றாம் இரகசியம் இரஷ்யாவை அர்ப்பணம் செய்தல் பற்றியதாகவும் இருக்கிறது. மூன்றாவது இரகசியத்தில் திருத்தந்தை ஒருவரின் இறப்பு பற்றி இருந்ததால் இன்னும் அது முழுமையாக வெளியிடப்படவில்லை என்பதும் சிலரின் கருத்து.

 

1984-ஆம் ஆண்டு திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அனைத்துலகையும் அன்னை கன்னி மரியாவுக்கு அர்ப்பணம் செய்தார். இதற்கு முன்னதாக திருத்தந்தையர் 12-ஆம் பயஸ் மற்றும் 6-ஆம் பவுல் ஆகியோர் அன்னை கன்னி மரியாவுக்கு உலகை அர்ப்பணம் செய்தனர்.

 

அன்னை கன்னி மரியா, பாத்திமா அன்னையாக நமக்குத் தரும் செய்திகள் மூன்று:

 

(அ) செபமாலை செபியுங்கள். அதாவது, செபம் மாலை போல முடிவின்றித் தொடரட்டும்.

 

(ஆ) அமைதி ஒன்றே நம் இலக்கு. அமைதி நம் அகத்தே உள்ளது.

 

(இ) எல்லாம் ஒருநாள் மறைந்துவிடும். ஒளிகொடுக்கும் சூரியனும்!

 

இன்றைய முதல் வாசகத்தில் பவுல் ஏதென்ஸ் நகரில் ஆற்றிய உரையை வாசிக்கின்றோம். கிரேக்க மெய்யியலின் தொட்டில் ஏதென்ஸ். சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் என்னும் மேற்கத்திய மெய்யியலின் பிதாமகன்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, உரையாற்றிய ஊர் ஏதென்ஸ்.

 

ஏதென்ஸ் நகர மக்கள் எப்படிப்பட்டவர்கள்? (1) நிறையக் கற்றவர்கள், (2) புதிய கருத்துக்களை வரவேற்பவர்கள், (3) ஆழ்ந்து கேட்பவர்கள், (4) நன்றாகப் பேசுபவர்களை உற்சாகப்படுத்தக்கூடியவர்கள், (5) மீண்டும் வரவேற்றுக் கேட்கும் எண்ணம் உடையவர்கள், மற்றும் (6) மாற்றத்தை அறிவுசார்நிலையில் எளிதில் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள்.

 

நாம் முதலில் ஏதென்ஸ் நகர மக்களிடமிருந்து மேற்காணும் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

 

தொடர்ந்து, பவுல் இன்று நமக்கு நிறைய பாடங்களைச் சொல்லித் தருகின்றார்:

 

(1) பவுலின் அறிவுத்திறன்

 

பவுலுக்கு எபிரேயம், அரமேயம், கிரேக்கம், சிரியம், மற்றும் இலத்தீன் தெரிந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், பவுலுக்குத் திருச்சட்டமும் யூத இறையியலும் அவரின் சம காலத்து மெய்யியல் சிந்தனைகளைகளும் நன்றாகத் தெரியும். இந்த அறிவுத்திறன் அவருக்கு நிறைய தன்மதிப்பையும் தன்னம்பிக்கையையும் கொடுத்திருக்கும். நாம் வாழ்வில் அறிந்துகொள்ளும் ஒவ்வொன்றும் இன்னொரு நாள் எங்கேயோ பயன்படும். ஆக, நமக்கு நடக்கும் அனைத்தும் ஏதோ ஒரு நோக்கத்திற்காகவே நடக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

 

(2) பவுலின் துணிச்சல்

 

பவுல் இங்கே தனிநபராக மக்கள் கூட்டத்தை, புதிய மக்கள் கூட்டத்தை எதிர்கொள்கின்றார். கடவுளின் துணை உள்ள ஒருவருக்கே இத்துணிச்சல் வரும். ஒவ்வொரு முறையும் நமக்கு இந்த அனுபவம் உண்டு. பேருந்தில் செல்லும்போது, திருமண விழாவிற்குச் செல்லும்போது, பணி மாற்றம் அடைந்து செல்லும்போது என நாம் ஒவ்வொரு முறையும் புதிய புதிய நபர்களைப் பார்க்கிறோம். பழகுகிறோம். உறவுகளை உருவாக்குகிறோம். பணிகளைச் சிறந்த முறையில் செய்கிறோம். காரணம், கடவுளின் உடனிருப்பு. இதை நாம் உணர்தல் அவசியம்.

 

(3) சமயோசிதப் புத்தி

 

எந்த நேரத்தில் எதை எப்படிச் சொல்ல வேண்டுமோ, செய்ய வேண்டுமோ, அந்த நேரத்தில் அதை அப்படிச் சொல்லும் பக்குவம். கூட்டத்தைப் பற்றிய அச்சமோ, புதிய இடத்தைப் பற்றிய கலக்கமோ இல்லாத பவுல், தன் கண்முன் நடக்கின்ற ஒன்றை அப்படியே எடுத்துப் பேசுகிறார். ‘நீங்கள் அறியாத தெய்வத்துக்கு’ என்று அங்கே இருந்த ஒரு பீடத்தை மையமாக வைத்து தொடங்குகிறார். என்ன ஆச்சர்யம்!

 

விளைவு, மக்களின் மனத்தைக் கவர்கின்றார் பவுல். புதிய இடம், புதிய நபர், புதிய வேலை போன்ற எதார்த்தங்களை நாம் எப்படி எதிர்கொள்கிறோம்? தன் இலக்கு, இருத்தல், மற்றும் இயக்கம் பற்றி அறிந்த பவுல் போன்றவர்களுக்கு எல்லா இடமும், எல்லா நபர்களும், எல்லா வேலையும் ஒன்றே.

 

நற்செய்தி வாசகத்தில், ‘தூய ஆவியார் வழிநடத்துவார், அறிவிப்பார், மாட்சிப்படுத்துவார்’ என்று ஆவியாரின் செயல்களைத் தம் சீடர்களுக்கு அறிவிக்கிறார் இயேசு.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: