
இன்றைய இறைமொழி
சனி, 14 பிப்ரவரி ’26
பொதுக்காலம் ஐந்தாம் வாரம், சனி
1 அர 12:26-32, 13:33-34. மாற் 8:1-10
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு அப்பம் பலுகும் நிகழ்வை வாசிக்கிறோம். முதல்முறை ஐந்து அப்பங்களைப் பலுகச் செய்து ஐயாயிரம் பேருக்கு வழங்குகிறார். இரண்டாம் நிகழ்வில் ஏழு அப்பங்களை பலுகச் செய்து நாலாயிரம் பேருக்கு வழங்குகிறார். இரண்டாவது நிகழ்வை மாற்கும் மத்தேயுவும் பதிவு செய்கிறார்கள்.
இரண்டு நிகழ்வுகளுமே ஒரே அமைப்பைக் கொண்டிருக்கின்றன: (அ) மக்களின் தேவை – பசியில் உணவு. (ஆ) இயேசுவின் பரிவு. (இ) சீடர்களை நோக்கிய கேள்வியும் அவர்களை ஈடுபடுத்துதலும். (ஈ) பசித்திருப்போருக்கு உணவு. (உ) எஞ்சிய துண்டுகள் சேகரிப்பு.
இலக்கியங்களில், இரண்டாம் முறை மொழிதல் என்பதற்கு மூன்று பொருள் உண்டு: (அ) நிகழ்வின் உண்மைத்தன்மையை உறுதி செய்வது. (ஆ) நிகழ்வின் கதாநாயகரின் பண்புநலனை அடையாளப்படுத்துவது. (இ) தொடர்ந்து இந்த நிகழ்வு நடந்தது எனக் காட்டுவதற்கு.
ஆக, இயேசு உண்மையிலேயே அப்பங்களைப் பலுகச் செய்தார். மக்கள்மேல் பரிவு கொண்டிருந்தார். இயேசு வல்ல செயல்கள் செய்வதற்கான ஆற்றல் கொண்டிருந்தார். சீடர்களுக்கும் அந்த ஆற்றலை அவர் வழங்கினார்.
இந்த நிகழ்வு இயேசுவுக்கு அல்ல, நமக்கு முதன்மையானதாக மாறுகிறது.
ஏனெனில், நம் கடவுள் பரிவுகாட்டுகிற, பசியாற்றுகிற கடவுள்.
‘தாயினும் சாலப் பரிந்து’ என்று மாணிக்கவாசகர் பாடுவதுபோல, தாய்க்குரிய பரிவுடன் நமக்கு உணவு கொடுக்கிறார் இயேசு.
இயேசு நம்மேல் பரிவுகொண்டு நம் பசி ஆற்றுகிறார் என்றால், நாம் பரிவுகொண்டு மற்றவர்களின் குறையை நிறைவுசெய்ய வேண்டும் – இதுவே நமக்கான அழைப்பு.
இன்றைய முதல் வாசகத்தில், போலியான பரிவைக் காண்கிறோம். சாலமோன் அரசருக்குப் பின்னர் அரசு இரண்டாக உடைகிறது. வடக்கில் உள்ள அரசன் எரொபவாம் வழிபாட்டுத் தலத்தை பெத்தேலுக்கு மாற்றுகிறார். ஆண்டவராகிய கடவுள் எருசலேமில் வீற்றிருந்தார். அவரைத் தேடி மக்கள் சென்றால் தென்நாட்டு அரசர் ரெகொபவாமுடன் இணைந்துகொள்வார்கள் என நினைத்து, போலியாக மக்கள்மேல் பரிவு காட்டுகிறார்: ‘நீங்கள் எருசலேமுக்குப் போய் வருவது பெருந்தொல்லை அல்லவா!’ இங்கே அரசரின் சொற்கள் தன்னலத்தில் எழுகின்றன. இயேசுவின் பரிவு மக்களை மையமாக வைத்திருந்தது. இயேசு மக்களின் நலத்தை நாடினார். எரொபவாம் தன்னுடைய நலத்தை மட்டுமே நாடுகிறார்.
அன்று தொடங்கி இன்று வரை ஆட்சியாளர்கள் மக்கள்மேல் காட்டும் பரிவில் அவர்களுடைய தன்னலமே மேலோங்கி நிற்கிறது.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Source: Rev. Fr. Yesu Karunanidhi
Share: