• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

ஆயனில்லாத ஆடுகள்போல! இன்றைய இறைமொழி. ஞாயிறு, 14 ஜூன் 2026.

Sunday, June 14, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 14 ஜூன் 2026
பொதுக்காலம் 11-ஆம் ஞாயிறு
விப 19:2-6. திபா 100. உரோ 5:6-11. மத் 9:36-10:8

 

ஆயனில்லாத ஆடுகள்போல!

 

‘ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட்’ என்னும் நாவில் ஒரு நிகழ்வு உண்டு. இளவல் ஆலிஸ் நாற்சாலை சந்திப்பு ஒன்றில் நின்றுகொண்டிருப்பாள். அப்போது அங்கே அவளைக் காண்கிற பூனை ஒன்று, ‘ஆலிஸ், நீ எங்கே போக வேண்டும்?’ என்று கேட்கும். ‘எனக்குத் தெரியாது’ என்பாள் ஆலிஸ். ‘எங்கே போக வேண்டும் எனத் தெரியவில்லை என்றால், எந்தச் சாலையும் நீ எடுக்கலாம்!’ என்று சொல்லிவிட்டு பூனை நகரும்.

 

மனித வாழ்வின் நிலையை எடுத்துச் சொல்கிறது இந்நிகழ்வு. திசை அறியாமல் நாமும் பல நேரங்களில் வாழ்க்கை என்னும் நாற்சாலைச் சந்திப்பில் நிற்கிறோம். நகர வேண்டும் எனத் தெரிகிறது. ஆனால், எதை நோக்கி நகர வேண்டும் என்று குழப்பமாக இருக்கிறது. இலக்கு இல்லாமல் நகர்ந்துகொண்டிருக்கிறோம். யாரும் நமக்கு இலக்கைக் காட்டவில்லையே என்ற வருத்தமும் நம்மில் இருக்கிறது.

 

விவிலியத்திலும் இப்படிப்பட்ட நிகழ்வு ஒன்று உண்டு. ஆபிரகாம்-சாரா இல்லத்திலிருந்து தப்பி ஓடுகிற அடிமைப் பெண் ஆகாரை எதிர்கொள்கிறார் ஆண்டவரின் தூதர். ‘நீ எங்கிருந்து வருகிறாய்? நீ எங்கே செல்கிறாய்?’ எனக் கேட்கிறார் தூதர். ‘நான் என் தலைவி சாராயிடமிருந்து ஓடி வருகிறேன்’ என்கிறார் ஆகார். முதல் கேள்விக்கு விடை அறிந்த ஆகார், இரண்டாம் கேள்விக்கு விடையின்றி நிற்கிறார். நம் கடந்தகாலம் நமக்குத் தெரிகிறது. ஆனால், எதிர்காலம் நமக்குத் தெரிவதில்லை. வாழ்வின் ஒவ்வொரு சூழலிலிருந்தும் நாம் தப்பி ஓடுகிறோம். ஆனால், எதை நோக்கி ஓடுகிறோம்?

 

காயங்களோடு நிற்கிற நாம் திசை அறியாமல் நிற்கிறோம். சுமைகளோடு நிற்கிற நாம் இலக்குத் தெரியாமல் விழிக்கிறோம்.

 

  1. ஆயனில்லா ஆடுகள்: மனித எதார்த்தத்தின் உருவகம்

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இப்படிப்பட்ட மக்கள் குழுவைத்தான் இயேசு சந்திக்கிறார். ‘திரண்டிருந்த மக்களை இயேசு கண்டபோது அவர்கள்மேல் பரிவு கொண்டார். அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள்.’

 

ஆயன் இல்லாத ஆடுகள் குழப்பமாக இருக்கும், பயத்துடன் இருக்கும், பசித்திருக்கும், திசை தெரியாமல் நிற்கும், எதிரிகளின் கைகளில் சிக்குகிற நொறுங்குநிலையில் இருக்கும்.

 

நம் குடும்ப வாழ்வில், புரிதலின்மை, இழப்பு, இறப்பு, பிரிவு, போதைப் பழக்கம், வன்முறை காரணமாக நாம் ஆயனில்லாத ஆடுகள்போல இருக்கிறோம்.

 

நோய்வாய்ப்படும்போது, வலி ஏற்படும்போது, முதுமையினால் நாம் ஆயனில்லாத ஆடுகள்போல உணர்கிறோம்.

 

சமூகத்தில், அரசியல் காரணங்களால், பொருளாதாரச் சிக்கல்களால், போர், வேலைவாய்ப்பின்மை, அநீதி, புலம்பெயர்தல், இயற்கைப் பேரழிவு போன்ற சூழல்களில் நாம் ஆயனில்லாத ஆடுகள்போல உணர்கிறோம்.

 

‘அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள் மக்கள்’ என்று பதிவு செய்கிறார் மத்தேயு.

 

அலைக்கழிப்பும் சோர்வும் நம் வாழ்வியல் அனுபவங்களாக இருக்கின்றன.

 

  1. முதல் வாசகம்: கடவுளின் இரக்கமும் உடன்படிக்கையும்

 

இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் சீனாய் மலைக்கு அருகில் பாளையம் இறக்குகிறார்கள். எகிப்துக்கும் வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குமான இணைப்புக் கோடாக இருக்கிறது சீனாய். இங்கிருந்துதான் மோசே புறப்பட்டார். இப்போது இங்கே திரும்புகிறார். இது அவருக்கும் மக்களுக்கும் ‘வீடு திரும்புதல்’ அனுபவமாக இருக்கிறது.

 

இங்கே கடவுள் அவர்களை ‘கழுகின் இறக்கைகள்மேல்’ வைத்துக் காப்பாற்றியதை நினைவுபடுத்துகிறார். அவர்களுக்கு சுதந்திரமும் பாதுகாப்பும் தொடர்கிறார். மேலும், அவர்களோடு உடன்படிக்கை செய்துகொள்கிறார். இரத்த உறவையும் திருமண உறவையும் தாண்டிய ஓர் உறவுநிலை இங்கே ஏற்படுகிறது.

 

  1. நற்செய்தி வாசகம்: இயேசுவின் பரிவு

 

மக்களுடைய எதார்த்த நிலை இயேசுவில் ஒரு சலனத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள்மேல் பரிவு கொள்கிறார். அந்தப் பரிவு உடனடியாக செயல்பாடாக மாறுகிறது. அவர்களுக்கான ஆயர்களை ஏற்படுத்தி அவர்கள் நடுவே மக்களை அனுப்புகிறார். இயேசுவுடைய பதிலிறுப்பு உடனடியாக இருக்கிறது. தாமே எல்லா இடத்திற்கும் செல்ல இயலாது என்று உணர்ந்த இயேசு தம் சீடர்களை அழைத்து அனுப்புகிறார்.

 

இரக்கம் பணியாக மாறுகிறது. ‘கொடையாகப் பெற்றுக்கொண்டீர்கள். கொடையாகவே வழங்குங்கள்’ என்று சொல்லி அனுப்புகிறார். சிறுநுகர் வாழ்க்கை முறையை சீடர்கள் பின்பற்ற வேண்டும்.

 

  1. இரண்டாம் வாசகம்: வலுவற்றவற்றில் செயலாற்றும் கடவுள்

 

‘நாம் பாவிகளாக இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார்’ என்று எழுதுகிறார் பவுல். கடவுளின் பரிவுள்ளம் இங்கே புலப்படுகிறது. நம்மை அன்பு செய்தார், நம்மை ஒப்புரவாக்கினார், நமக்கு மகிழ்ச்சி தந்தார் கடவுள்.

 

மேற்காணும் மூன்று வாசகங்களின் பின்புலத்தில், ‘ஆயனில்லாத ஆடுகள் போல’ இருக்கிற நாம் என்ன செய்ய வேண்டும்?

 

(அ) பங்கேற்பு

 

நம் பார்வையை அகலமாக்குதல். தாங்கள் அடிமைகள் என்று நினைத்துக்கொண்டிருந்த மக்கள் சீனாய் மலைக்கு அருகில் வந்தவுடன் தாங்கள் கடவுளின் மக்கள் என்னும் புதிய பார்வையைப் பெறுகிறார்கள். கடவுளுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் பங்கேற்கிற உணர்வு அவர்களுக்குத் துணிவையும் ஊக்கத்தையும் தருகிறது. பிரச்சினைகளை மட்டும் பெரிதாக்கிப் பார்க்காமல், நம் வாழ்க்கையைப் பெரிதாக்கிப் பார்க்க வேண்டும்.

 

(ஆ) பரிவு

 

இயேசு மக்கள்மேல் பரிவு கொள்கிறார். சீடர்களைப் பணிக்கு அனுப்புகிறார். பரிவாலும் இரக்கத்தாலும் நாம் வெற்றி பெற முடியும். மற்றவர்கள்மேல் பரிவு காட்டுவதற்கு முன் கடவுள் நமக்குக் காட்டுகிற இரக்கத்தை நாம் அனுபவிக்க வேண்டும். கழுகு தன் குஞ்சுப் பறவைக்குப் பறக்கக் கற்றுக்கொடுப்பதுபோல கடவுள் தம் மக்களுக்குக் கற்பிக்கிறார். நாமும் ஒருவர் மற்றவரைத் தாங்க வேண்டும்.

 

(இ) பணி

 

இயேசு நோக்கி வருகிற சீடர்கள் மக்களை நோக்கி அனுப்பப்படுகிறார்கள். இந்த இரண்டு வழிப்பயணம் சீடத்துவத்தில் அவசியம். ஒரே நேரத்தில் கடவுள் நோக்கியும் ஒருவர் மற்றவர் நோக்கியும் செல்ல வேண்டும். நாம் மற்றவர்களை நோக்கிச் செல்லும்போது மற்றவர்களை வழிநடத்தும் ஆயனாக மாறுகிறோம்.

 

ஆயனில்லாத ஆடுகள் போன்ற உணர்வு எழும்போது நம் இதயம் ஆண்டவரை நோக்கி எழட்டும். ஏனெனில், ‘அவரே நம்மைப் படைத்தவர். நாம் அவர் மக்கள். அவர் மேய்க்கும் ஆடுகள்.’

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: