• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

வாளையே கொணர வந்தேன்! இன்றைய இறைமொழி. திங்கள், 14 ஜூலை ’25.

Monday, July 14, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

உண்மை சீடத்துவம் அடக்குமுறை அடிமைத்தனம் குழந்தை கொலைகள் எகிப்த்திய இனவெறி ஆண்டவரின் பெயர் கடவுள் உடனிருப்பு கடவுள் துணை Daily Catholic Lectio இன்றைய இறைமொழி

இன்றைய இறைமொழி
திங்கள், 14 ஜூலை ’25
பொதுக்காலம் 15-ஆம் வாரம் – திங்கள்
விடுதலைப் பயணம் 1:8-14, 22. மத்தேயு 10:34-11:1

 

வாளையே கொணர வந்தேன்!

 

1. தொடக்கநூலில் குழந்தைப்பேறின்மை பிரச்சினையாக இருந்தது – சாரா, ரெபேக்கா, ராகேல் என்னும் குலமுதல்வியர் தொடக்கத்தில் குழந்தைப்பேறில்லாமல் இருக்கிறார்கள். விடுதலைப் பயண நூலில் குழந்தைகள் அதிகம் பிறந்தது பிரச்சினையாக இருக்கிறது. யோசேப்பை அறிந்திராத புதிய மன்னன் எகிப்தில் தோன்றுகிறான். இஸ்ரயேலர் பெரும்பான்மையாக வளர்ந்து வருவது அவனுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. போர் மற்றும் நெருக்கடி காலத்தில் அவர்கள் எதிரிகளோடு சேர்ந்துகொண்டால் என்ன ஆவது என்று எண்ணியவனாக, இஸ்ரயேல் மக்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்வதை மூன்று நிலைகளில் தடுக்கிறான்: ஒன்று, அதீத வேலை. இரண்டு, தாதியர் வழியாக ஆண்குழந்தைகளைக் கொல்வது. மூன்று, ஆண் குழந்தைகளை நைல் ஆற்றில் எறியுமாறு கட்டளை இடுவது. இரண்டு விடயங்கள் இங்கே கவனிக்கத்தக்கவை: ஒன்று, ஒருவர் எவ்வளவு பெரிய ஆளுநராக இருந்து, ஊருக்கும் உலகுக்கும் சாப்பாடு போட்டாலும், அவர் விரைவில் மறக்கப்படுவார். நாம் யாரும் இன்றியமையாதவர்கள் அல்லர் என்ற இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்வது கடினம். ஏனெனில், இதற்கு நிறைய தாழ்ச்சியும் துணிச்சலும் தேவை. இரண்டு, நம் வாழ்வு பல நேரங்களில் நம் கையில் இல்லை, கடவுள் கையிலும் இல்லை. ஆட்சியாளர்களே – பெரும்பாலும் தங்களுடைய மடமையால் – நம் வாழ்க்கையை நெறிப்படுத்துகிறார்கள். இதுவும் ஏற்றுக்கொள்வதற்குச் சிரமமாக இருக்கிறது.

 

2. இயேசுவைத் தெரிந்துகொள்வது ஒரு குடும்பத்தில் ஏற்படுத்தக்கூடிய பிளவு, இயேசுவை முதன்மையாகத் தெரிந்துகொள்வதன் அவசியம், சீடர்களை ஏற்றுக்கொண்டு விருந்தோம்புதல் என்று மூன்று கருத்துருக்களைத் தாங்கியிருக்கிறது நற்செய்தி வாசகம். அமைதியின் அரசராக நாம் கொண்டாடுகிற இயேசு, தாம் வாள் கொண்டு வந்ததாக அறிவிப்பதைக் கேட்பது நமக்கு நெருடலாக இருக்கிறது. இயேசு கொணர்கிற வாள் என்பதைப் படைவீரரின் வாள் என்று புரிந்துகொள்வதை விட, மருத்துவரின் கத்தி எனப் புரிந்துகொள்வது நலம். மருத்துவரின் கத்தி தோலை வெட்டிக் கிழித்தாலும், இறுதியில் அது கொடுப்பது நலமே. இயேசுவைத் தெரிந்துகொள்வதால் நாம் நம் குடும்பத்தாரிடமிருந்து பிரிக்கப்பட்டதுபோலத் தெரிந்தாலும், இறைவனோடு இணைகிறோம் என்பதால் அது நமக்கு நலமே. இதுவே ஒருவர் சுமக்க வேண்டிய சிலுவையாக இருக்கிறது. சீடர் பெறுகிற கைம்மாறு அவர் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதே. சீடர் என்பதற்காக நாம் நிராகரிக்கப்பட்டாலும், இன்னோர் இடத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறோம் என்பது நிதர்சனமான உண்மை.

 

3. நாம் இன்றியமையாதவர்கள் அல்லர் என்பதாலும், ஆட்சியாளர்கள் நம்மைத் தங்கள் விருப்பம்போல் நடத்துவார்கள் என்பதாலும் நாம் சோர்வு அல்லது விரக்தி அடையத் தேவையில்லை. நம் அழுகை, துயரம், கண்ணீர் அனைத்தும் நம்மைப் படைத்தவரைச் சென்றடையவே செய்கின்றன. நாமும் நம் ஆட்சியாளர்களும் நம்மைப் படைத்த கடவுளை விடப் பெரியவர்கள் அல்லர். அவருடைய திட்டப்படியே அனைத்தும் நடந்தேறுகின்றன. நம் உழைப்பின் சோர்வில் நமக்கு ஆறுதல் தருபவர் அவரே. தாதியர் நம் குழந்தைகளைக் கொல்ல வந்தாலும், அவர்களுக்கு நல்மனத்தைத் தருபவர் அவரே. நைல் நதியில் தூக்கியெறியப்பட்டாலும் நம்மைக் காப்பாற்றுபவர் அவரே. அவரின் உடனிருப்பு வாள்போல நமக்கு நெருடலாக இருந்தாலும், அந்த வாள் தருவதே நலமே. அவரிடம் நலம் பெற்ற நாம் ஒருவர் மற்றவருக்கு அதை வழங்குதல் சிறப்பு.

 

இன்றைய பதிலுரைப்பாடல் (காண். திபா 124), ‘ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை! விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே!’ என்ற மிக அழகான வாக்கியத்தைக் கொண்டிருக்கிறது.

 

போர் மற்றும் இயற்கைச் சூழலில் தங்களுக்குத் துணை என்று யாரும் இல்லாத சூழலில், ‘ஆண்டவரின் பெயரே’ தங்களுக்குத் துணை என்று இஸ்ரயேல் மக்கள் நம்பினர். இதை நாம் இரண்டு நிலைகளில் புரிந்துகொள்ளலாம். ஒன்று, ‘ஆண்டவரின் பெயர்’ எருசலேம் ஆலயத்தில் குடியிருந்தது என்று இஸ்ரயேல் மக்கள் நம்பினர். இரண்டு, ஒருவரின் பெயர் என்பது அவருடைய உடனிருப்பைக் காட்டுகிறது.

 

நற்செய்தி வாசகத்தில், தன் பெயரின் பொருட்டு சீடர் ஒருவரின் உள்ளத்திலும் இல்லத்திலும் ஏற்படும் தாக்கத்தைப் பற்றி எடுத்துரைக்கின்றார் இயேசு. மேலும், இதன் பின்புலத்தில் சீடத்துவத்திற்கான பாடங்களையும் முன்வைக்கின்றார்: (அ) இயேசுவை முதன்மையானதாக் தெரிந்துகொள்ள வேண்டும். (ஆ) தன் சிலுவையைச் சுமக்க வேண்டும். (இ) தன் உயிரை இழக்கத் துணிய வேண்டும்.

 

ஒட்டுமொத்தமாக ஆண்டவரின் பெயரே சீடருக்குத் துணையாக இருக்கிறது.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: