• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

ஏழு முறை மட்டுமல்ல. இன்றைய இறைமொழி. வியாழன், 14 ஆகஸ்ட் ’25.

Thursday, August 14, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இரக்கம் மன்னிப்பு புனித மாக்ஸிமிலியன் மரிய கோல்பே யோர்தான் நதி கடந்தல் இயேசுவின் குழுமப் போதனை மேலோர் மன்னிப்பு கீழோர் மன்னிப்பு பலன்கருதா மன்னிப்பு கடவுளின் பரிவு-சினம் நன்றியுணர்வு மன்னிப்பு கடமை மன்னிக்கும் மனப்பாங்கு பரிவு-அன்பு உணர்வு சினம்-நீதி உணர்வு மன்னிப்பு-மனமுதிர்ச்சி அடையாளம்

இன்றைய இறைமொழி
வியாழன், 14 ஆகஸ்ட் ’25
பொதுக்காலம் 19-ஆம் வாரம், வியாழன்
யோசுவா 3:7-10, 11, 13-17. மத்தேயு 18:21-19:1

 

ஏழு முறை மட்டுமல்ல

 

மோசேயின் மறைவுக்குப் பின்னர் யோசுவாவின் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் நுழைகிறார்கள். கால் நனையாமல் செங்கடலைக் கடந்ததுபோலவே யோர்தான் ஆற்றையும் கடக்கிறார்கள். மோசே மற்றும் யோசுவா ஆகியோரின் செயல்பாடுகள் இரு நிகழ்வுகளிலும் மாறுபட்டு இருக்கின்றன. அங்கே மோசே செங்கடலைத் தன் கோலால் அடித்துப் பிரிக்கிறார். இங்கே ஆண்டவரின் குருக்கள் உடன்படிக்கைப் பேழையை எடுத்துக்கொண்டு ஆற்றுக்குள் இறங்குகிறார்கள்.

 

நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் குழுமப் போதனை தொடர்கிறது. மன்னிப்பு குழும வாழ்வின் முக்கியமான பண்பாக முன்வைக்கப்படுகிறது. நாம் இறைவனிடமிருந்து மன்னிப்பு பெற்றிருப்பதால் ஒருவர் மற்றவரை மன்னிக்கும் கடமை உண்டு என்னும் செய்தி தரப்படுகிறது.

 

மத்தேயு நற்செய்தியில் உள்ள குழுமப் போதனை (அதி. 18) இன்றைய வாசகத்திலும் தொடர்கின்றது. இன்றைய வாசகத்தில் இழையோடுகின்ற கருத்து ‘மன்னிப்பு.’ பேதுருவின் கேள்வியோடு தொடங்கும் இப்பகுதி மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணப்படுகின்றது.

 

‘ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்து வந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்?’ என்று கேட்கின்றார் இயேசு.

 

இந்தக் கேள்விக்கு நம் விடை எப்படி இருக்கும்?

 

‘அது ஒருவரின் தவறு அல்லது பாவத்தைப் பொருத்து!’ என்று சொல்வோம். இல்லையா?

 

‘பென்சில் திருடும் குற்றத்தை’ எத்தனை முறை வேண்டுமானாலும் மன்னிக்கலாம். நம் இல்லத்தில் உள்ள நகைகளைத் திருடுபவரை எத்தனை முறை வேண்டுமானாலும் மன்னிக்க முடியுமா?

 

நம் மன்னிப்பு பல நேரங்களில் குற்றத்தின் அளவைப் பொருத்தும், குற்றம் ஏற்படுத்துகின்ற தாக்கத்தைக் குறித்தும், குற்றம் செய்தவரின் இயல்பைப் பொருத்தும் இருக்கிறது.

 

ஆனால், இயேசு இப்படிப்பட்ட எந்தவொரு யோசனையும் செய்யாமல், உடனடியாக, எந்தவொரு நிபந்தனையுமின்றி, ‘ஏழு முறை மட்டுமல்ல. எழுபது தடவை ஏழு முறை’ என்கிறார். தொடர்ந்து இயேசு ஓர் உவமையையும் சொல்கின்றார். அரசரிடம் பெருந்தொகை மன்னிப்பு பெற்ற பணியாளர், தன் உடன்பணியாளரின் சிறுதொகையை மன்னிக்க மறுக்கின்றார். அரசர் எவ்வளவு பெரிய தொகையையும் மன்னிக்கலாம். ஏனெனில், அது அவருடைய பணம் இல்லையே! – என்று நாம் வாதாடலாம்.

 

ஆனால், இந்த உவமை கூறும் உள்கருத்தைப் புரிந்துகொள்வோம்:

 

(அ) கீழிருக்கும் ஒருவர் மேலிருக்கும் ஒருவரை எளிதில் மன்னிக்கலாம்.

 

எடுத்துக்காட்டாக, ஆசிரியராக நான் பணிபுரிகிறேன் என வைத்துக்கொள்வோம். என் தலைமை ஆசிரியர் நான் செய்யாத தவறுக்காக என்னை மற்றவர்கள்முன் கடிந்துகொள்கின்றார். அது என்னை நிறையவே காயப்படுத்துகின்றது. ஆனால், சில நாள்களுக்குப் பின்னர் தன் தவற்றை உணர்ந்து தலைமை ஆசிரியர் என்னிடம் மன்னிப்பு கேட்கின்றார். ‘ஐயோ! சார் பரவாயில்லை! இதுல என்ன இருக்கு! இருக்கட்டும்!’ என்று சொல்வேன். ஆக, கீழிருக்கும் நான் எனக்கு மேலிருக்கும் தலைமையாசிரியரை மன்னிக்கிறேன். அப்படி மன்னிப்பதால் அவரிடமிருந்து இன்னும் எனக்கு நிறைய பலன்கள் கிடைக்கலாம். ஆனால், என்னுடன் பணியாற்றும், அல்லது எனக்குக் கீழ் படிக்கும் மாணவர் ஒருவரை என்னால் எளிதில் மன்னிக்க இயலாது. ஏனெனில், நான் அவரை மன்னிப்பதால் எனக்கு அவரிடமிருந்து எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை.

 

உவமை தருகின்ற முதல் பாடம், மன்னிப்பு என்பது கீழ்நோக்கி நகர்தல் வேண்டும்.

 

(ஆ) மன்னிப்பு என்பது ஒருவர் பெறுகின்ற இரக்கத்தைப் பொருத்து அமைய வேண்டும்.

 

பணியாளர் தலைவரிடமிருந்து மிகுதியான பரிவைப் பெறுகின்றார். அவர் பெறுகின்ற பரிவு அவரைத் தனக்குக் கீழிருப்பவரிடம் பரிவுகொள்ளத் தூண்ட வேண்டும். ஆனால், அது நடைபெறவில்லை. பரிவைப் பெற்ற அவர் அதைத் தன்னுடன் நிறுத்திக்கொள்வதோடு, அரசர் தனக்குப் பரிவு காட்டியது அவருடைய கடமை என்று நினைத்துக்கொள்கின்றார். ‘எனக்கு உதவி செய்வது மற்றவர்களுடைய கடமை’ என நினைப்பவர் நன்றியுணர்வு பாராட்டமாட்டார். அப்படியே, ‘மற்றவர் என்னை மன்னிப்பது அவர்களுடைய கடமை’ என நினைப்பவர் மற்றவர்களை மன்னிக்க மாட்டார்.

 

(இ) கடவுளின் பரிவும் சினமும்

 

பணியாளரிடம் பரிவு காட்டிய அரசர் சில மணி நேரங்களில் சினம் காட்டுகின்றார். கடவுளிடம் இந்த இரு இயல்புகளும் உண்டு. நம்மிடமும் இந்த இரு இயல்புகளும் உண்டு. ‘பரிவு’ என்னும் உணர்வு ‘மற்றவர்கள்மேல் நாம் கொள்ள வேண்டிய அன்பு உணர்விலிருந்து’ வருகின்றது. ‘சினம்’ என்னும் உணர்வு ‘மற்றவர்கள்மேல் நாம் காட்ட வேண்டிய நீதி உணர்விலிருந்து’ வருகின்றது. வங்கியில் வரிசையில் எனக்குப் பின்னால் நிற்கும் ஒருவர் எனக்கு முன்னால் சென்றுவிட்டால் அவர்மேல் கோபம் வருகின்றது. ஏனெனில், அவர் எனக்கு அநீதி செய்கின்றார். ஆனால், வயது முதிர்ந்த ஒருவர் நமக்குப் பின்னால் நிற்க, நாமே அவரிடம், ‘சார்! நீங்க போங்க!’ என்று சொல்லும்போது அங்கே நம் அன்பு வெளிப்படுகின்றது. கடவுளின் அன்பை அனுபவித்த ஒருவர் மற்றவரை அன்புடன் நடத்த வேண்டுமே தவிர, அநீதியுடன் நடத்தக் கூடாது. அப்படி நடத்தினால் அது கடவுளின் சினத்தைத் தூண்டியெழுப்பும்.

 

‘மன்னிப்பு’ – மனமுதிர்ச்சியின் அடையாளம்.

 

இன்றைய முதல் வாசகத்தில், யோசுவாவின் தலைமையில் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் நுழைகின்றனர். யோர்தான் ஆற்றில் குருக்கள் இறங்கி நின்றவுடன் வெறுந்தரை தோன்ற, மக்கள் உடன்படிக்கைப் பேழைக்குக் கீழே நடந்து அக்கரையை அடைகின்றனர்.

 

மற்றவர்களின் கண்ணீரைத் துடைத்து அவர்களின் கன்னங்களில் உலர்ந்த தரை தோன்றச் செய்வது மன்னிப்பு.

 

உலர்ந்த தரையைத் தோன்றச் செய்தார் கடவுள்.

 

உலர்ந்த கன்னத்தை தோன்றச் செய்யும் நாமும் கடவுளரே!

 

இன்று நாம் புனித மாக்ஸிமிலியன் மரிய கோல்பேயை நினைவுகூர்கிறோம். நாசி வதை முகாமில் இருந்த இந்த அருள்பணியாளர் தன் சக கைதிக்காகத் தன் உயிரைக் கொடுக்கிறார். ‘தன் நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதைத் தவிர மேலான அன்பு இல்லை’ என்பதன் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் இவர்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: