
இன்றைய இறைமொழி
வெள்ளி, 14 நவம்பர் ’25
ஆண்டின் பொதுக்காலம் 32-ஆம் வாரம், வெள்ளி
சாலமோனின் ஞானம் 13:1-9. லூக்கா 17:26-37
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இறுதிநாள்கள் பற்றி தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார். அவருடைய அறிவுரையின் மையமாக இருப்பது, ‘திடீரென வரும் அந்நாள்.’ அதாவது, அந்த நாள் திடீரென வரும் என்றும், அந்த நாள் நமக்கு எந்த அவகாசமும் அளிக்காது என்றும், தயார்நிலை அவசியம் என்றும் குறிப்பிடுகிறார் இயேசு.
மானிட மகனுடைய காலத்தில், அல்லது அவருடைய இரண்டாம் வருகையின்போது, அல்லது உலக முடிவில், அல்லது இறுதித் தீர்ப்பின் போது நடக்கும் நிகழ்வுகள் பற்றித் தம் சீடர்களோடு பகிர்ந்துகொள்கிறார் இயேசு.
இந்த நற்செய்திப் பகுதியில் இயேசு ஐந்து உருவகங்கள் அல்லது ஒப்புமைகளைப் பயன்படுத்துகின்றார்: (அ) நோவாவின் காலம். வாழ்க்கை இயல்பாக இருந்தது. ஆனால், திடீரென அவர்கள் வாழ்க்கை ஒருநாள் முடிந்துவிட்டது. (ஆ) லோத்து சோதோமை விட்டுப் போன நாள். எல்லாரையும் அழித்தது. லோத்து குடும்பம் தப்பியது. ஆனால், அழிவைத் திரும்பிப் பார்த்த லோத்தின் மனைவி உப்புச் சிலையாக மாறுகின்றார். (இ) ஒரே கட்டிலில் இருவர் படுத்திருப்பர். ஒருவர் எடுக்கப்படுவார். மற்றவர் விடப்படுவார். இரண்டு பேர் ஓய்ந்திருக்கின்றனர். ஓய்ந்திருப்பவர்களில் ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுகிறார். மற்றவர் விடப்படுகிறார். (ஈ) இருவர் மாவரைப்பர். ஒருவர் எடுக்கப்படுவார். மற்றவர் விடப்படுவார். இரண்டு பேர் பணிசெய்துகொண்டிருப்பர். அவர்களில் ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுகிறார். மற்றவர் விடப்படுகிறார். (உ) எங்கே நிகழும்? ‘பிணம் எங்கேயோ கழுகுகளும் அங்கேயே!’ அதாவது, எங்கு எது நடக்குமோ அங்கு அது நடக்கும்.
மேற்காணும் உருவகங்கள் நமக்கு மூன்று விடயங்களைச் சொல்கின்றன:
(அ) அந்த நாள் எப்போது என்பதை நாம் அறிந்துகொள்ள இயலாது.
(ஆ) அந்த நாளின் நிகழ்வுகளை நாம் நிர்ணயிக்க முடியாது.
(இ) அந்த நாளில் வாழ்க்கை இயல்பாகச் சென்றுகொண்டிருக்கும்.
‘லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்!’ என்று சொல்லி, லோத்தின் மனைவியை உருவகமாக முன்மொழிகின்றார் இயேசு.
லோத்தின் மனைவி என்ன செய்தார்? அவரை நாம் ஏன் நினைத்துக்கொள்ள வேண்டும்?
‘அந்நகரங்களையும் அவற்றைச் சுற்றியிருந்த சமவெளி முழுவதையும் ஆண்டவர் அழித்தார். நகர்களில் வாழ்ந்த அனைவரையும் நிலத்தில் தளிர்த்தனவற்றையும் அழித்தார். அப்பொழுது லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள். உடனே உப்புத் தூணாக மாறினாள்’ (தொநூ 19:25-26).
லோத்தின் மனைவி சோதோம் நகரைத் திரும்பிப் பார்த்ததால் உப்புத்தூணாக மாறுகிறார்.
சாக்கடலைச் சுற்றி நிறைய உப்புத் தூண்கள் இன்றும் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று ஒரு பெண் திரும்பிப் பார்ப்பது போல இருக்கும். அத்தூணுக்குப் பின் உள்ள கதை என்று இக்கதையாடல் எழுதப்பட்டிருக்கலாம். இப்படிப்பட்ட எழுத்துக்கு ‘பெயர் வரையறைக் கதையாடல்’ என்று பெயர். அதாவது, ஒரு பெயர் எப்படி வழங்கலாயிற்று என்பதற்காக வழங்கப்படும் கதை. எடுத்துக்காட்டாக, ‘வைகை’ என்ற ஆற்றின் பெயர் வரக் காரணம், ‘சிவபெருமான் தன் கையை வைத்ததால், அது வை-கை என்று அழைக்கப்பட்டது’ என்று சொல்லப்படுகிறது
லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தது ஏன்?
தான் வளர்த்த கோழிக்கு என்ன ஆயிற்று? தன் ஆடுகள் அழிந்திருக்குமோ? தன் தோட்டம் பொசுங்கியிருக்குமோ? பக்கத்து வீட்டுத் தோழியரை உடன் அழைத்து வந்திருக்கலாமே? மாடியில் காயப்போட்ட வடாகம் என்ன ஆயிற்று? துணிகள் காயுமுன் கந்தகம் பொழிய வேண்டுமா? என்ற கேள்விகளோடு திரும்பிப் பார்த்திருக்கலாம். அல்லது, ‘என்னதான் நடக்கிறது?’ என்ற ஆவல் மிகுதியால் திரும்பிப் பார்த்திருக்கலாம். ஆனால், ஒன்று நிச்சயம். திரும்பிப் பார்த்தல் தவறு.
இரண்டு நாள்களுக்கு முன் பத்து தொழுநோயாளர் நற்செய்திப் பகுதியில் திரும்பிப் பார்த்தலும் திரும்பி வருதலும் நன்று என்று சொன்னோம். திரும்பிப் பார்த்தல் நன்றே. ஆனால், திரும்பிப் பார்த்து நிற்றல் ஆபத்தானது. கார் ஓட்டிச் செல்கின்ற நபர் பின்னால் வருகின்ற வாகனங்களைப் பார்ப்பதற்கான ‘ரேர் மிரர்’ மட்டும் பார்த்துக்கொண்டே ஓட்டினால் என்ன ஆகும்? முன்னால் அவர் மோதிவிடுவார்.
நம் வாழ்க்கை நமக்கு நிற்கவும், திரும்பிப் பார்க்கவும் நேரம் தருவதில்லை. நாம் முன்னால் சென்றுகொண்டே இருக்க வேண்டும். நம் வாழ்வில் நாம் கடந்து வந்த பாதை கடந்ததுதான். மீண்டும் போய் அதைச் சரிசெய்ய இயலாது. ஆக, நாம் வாழும்போது அறிந்து, தெளிந்து, நன்றாக வாழ்ந்துவிட்டால் போதும்.
முன்னே செல்கிறவர் முன்னே தொடர்ந்து செல்லட்டும் எனக் கற்பிக்கிறார் லோத்தின் மனைவி. கடவுளை அறிதல் வழியாகவே ஒருவர் அறிவு பெறுகிறார் எனச் சொல்கிறார் சாலமோனின் ஞானநூல் ஆசிரியர். கடவுளை அறிகிற ஒருவர் கடவுளின் திருமுன்னிலையையும் திருவருகையையும் அறிந்தவராக இருக்கிறார்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: