• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

தலைவனின் தயக்கம்! இன்றைய இறைமொழி. செவ்வாய், 15 ஜூலை ’25.

Tuesday, July 15, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

புனித பொனவெந்தூர் மோசே வாழ்க்கை மனமாற்றம் மனம் மாறுதல் நேர்மறை தன்னிறைவு கொராசின் கப்பர்நாகூம் இயேசுவின் போதனை இயேசுவின் சாபம் எகிப்திய அநீதி முற்சார்பு எண்ணம் எதிர்வினையாற்றுதல் Daily Catholic Lectio இன்றைய இறைமொழி

இன்றைய இறைமொழி
செவ்வாய், 15 ஜூலை ’25
பொதுக்காலம் 15-ஆம் வாரம் – செவ்வாய்
புனித பொனவெந்தூர் – ஆயர், மறைவல்லுநர்
விடுதலைப் பயணம் 2:1-15. மத்தேயு 11:20-24

 

தலைவனின் தயக்கம்!

 

எல்லோரும் கொல்லப்பட தலைவன் மட்டும் தப்புவது என்பது கதைசொல்லிக் கூறு. நைல் நதியில் எறியப்படுகிற குழந்தை ஒன்று பார்வோனின் இல்லத்தைச் சென்றடைகிறது என்பது மோசே வரலாறு. ‘நீரிலிருந்து நான் இவனை எடுத்தேன்’ எனச் சொல்லிப் பார்வோனின் மகள் குழந்தைக்கு ‘மோசே’ எனப் பெயரிடுகிறாள். இப்பெயர் மோசே பின்நாளில் செய்ய வேண்டிய பணியைக் குறிக்கும் காரணப் பெயராகவும் மாறுகிறது. ஏனெனில், இஸ்ரயேல் மக்களைச் செங்கடல் என்னும் நீரிலிருந்து கால் நனையாமல் எடுத்து அவர்களைப் பாலும் தேனும் பொழியும் நாட்டுக்குக் கூட்டிச் செல்பவர் இவரே. மோசே இளவலாக இருந்தபோது தன் இனத்தான் ஒருவன்மேல் எகிப்தியன் ஒருவன் கையை ஓங்குவதைக் கண்டு சினமுற்று அவனைக் கொன்று போடுகிறார். பார்வோனின் இல்லத்தில் வளர்ந்தாலும் தன் எபிரேய அடையாளத்தையும் தான்மையையும் மோசே மறக்கவில்லை. தான் எகிப்தியனைக் கொன்ற விடயம் பார்வோனின் காதுகளுக்கு எட்ட, பார்வோனிடமிருந்து தப்பி மிதியான் செல்கிறார் மோசே.

 

இயேசு வல்ல செயல்கள் நிகழ்த்திய நகரங்கள் மனம் மாறவில்லை. ‘மனம் மாறவில்லை’ என்றால் ‘பாவ அறிக்கை செய்து நற்கருணை வாங்கவில்லை’ என்று நாம் இன்று நினைப்பது போலப் புரிந்துகொள்ளக் கூடாது. ‘மனம் மாறுதல்’ என்பது பாவ அறிக்கை செய்தல் என்று சுருங்கிவிட்டது வருத்தத்துக்குரியது. இயேசுவை இறைமகன் என ஏற்றுக்கொள்தலே மனமாற்றம். இயேசுவின் போதனைகளை மக்கள் கேட்டார்கள், அவர் ஆற்றிய வல்ல செயல்களை – நோயுற்றோருக்கு நலம் தருதல், இறந்தோரை உயிர்த்தெழச் செய்தல், பேய்களை ஓட்டுதல் – கண்டார்கள். ஆனால், அவரை இறைமகன் என ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு இரு காரணங்களைக் சொல்லலாம்: ஒன்று, அவை அவர்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. அதாவது, அவர்களுடைய வாழ்வில் வல்ல செயல்கள் எதுவும் நடந்தேறவில்லை. இரண்டு, எதிர்மறைத் தன்னிறைவு. நேர்முகமான தன்னிறைவு நலமானது. தன்னிறைவே எதிர்மறையாக மாறினால், அதாவது ‘எனக்கு நான் மட்டும் போதும்’ என்னும் மனப்பாங்கு வந்துவிட்டால், கடவுளும் தேவையில்லாத நபராக அல்லது சுமையாக மாறிவிடுவார். இந்த இரு காரணங்களுக்காக இயேசுவை ஏற்றுக்கொள்ள அவருடைய சமகாலத்தவர்கள் தயங்குகிறார்கள். இயேசுவும் அந்நகரங்களைக் கடிந்துகொள்கிறார்.

 

தன் போதனைகளைக் கேட்டு, வல்ல செயல்களைக் கண்டு மனம் மாறாத நகரங்களை இயேசு சபிக்கின்றார். ‘ஐயோ! கேடு!’ என்று இயேசு சாபமிடுதல் நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

 

‘பகைவருக்கும் அன்பு’ என்று கற்பித்த இயேசு எப்படி சாபம் கொடுக்க முடியும்? என்ற கேள்வியும் எழுகின்றது.

 

கொராசின் மற்றும் கப்பர்நாகூம் நகரங்கள் மனம் மாறாமல் இருக்கக் காரணங்கள் மூன்று என்று குறிப்பிடலாம்: (அ) தங்களுடைய பழைய வாழ்க்கை போதும் என்ற மனநிலையில் இருந்திருப்பார்கள். (ஆ) புதியது பழையதை விட ஈர்ப்பானதாகத் தோன்றாமல் இருந்திருக்கும். (இ) தன் கவனத்தை தன் வளர்ச்சியின்மேல் மட்டும் காட்டியிருப்பார்கள்.

 

இயேசுவின் போதனை அனைவரையும் மனமாற்றத்திற்கு அழைக்கிறது. மனமாற்றம் நடைபெறாதபோது இயேசுவின் சாபம் நம்மேல் விழுகிறது. அவருடைய சாபம் நமக்கு அவர் விடுக்கும் எச்சரிக்கையே அன்றி, நம்மேல் அவர் இடும் கண்டனம் அல்ல.

 

மோசே பார்வோனிடமிருந்து தப்பி ஓடுகிறார். இதை இரு நிலைகளில் புரிந்துகொள்ளலாம்: ஒன்று, மோசே தானே தலைவராக மாற முயன்றபோது – அதாவது, தன் கண்முன் நடந்த அநீதியைக் கடிந்துகொள்பவராக மாறியபோது – அது தோல்வியில் முடிகிறது. ஆக, இறைவனே அழைத்தாலொழிய தலைமைத்துவத்தை ஒருவர் ஏற்க முடியாது. இரண்டு, மோசேயின் கோபம், முற்சார்பு எண்ணம் ஆகியவை மறைய அவருக்கென்று நேரம் தேவைப்படுகிறது. எகிப்தை அடக்குவதற்கான தலைவரை ஆண்டவராகிய கடவுள் மிதியானின் பாலைவனத்தில் உருவாக்குகிறார். இந்தத் தூர மற்றும் இட இடைவெளி மோசேயின் தனிப்பட்ட வாழ்வு மாற்றத்திற்கான நேரமாகவும் இருக்கிறது. நற்செய்தியின் பின்புலத்தில், இயேசு என்னும் தலைவர் தம் செய்தி ஏற்றுக்கொள்ளப்படாததை எண்ணித் தயக்கம் காட்டுகிறார். அவருடைய தயக்கமே கடிந்துரையாக மாறுகிறது. நம் சொற்களும் செயல்களும் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாதபோது நாம் எப்படி எதிர்வினை ஆற்றுகிறோம்? சில நேரங்களில் மோசே போல அமைதியாக ஒதுங்கி நிற்பது நலம்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: