இன்றைய இறைமொழி
வெள்ளி, 15 ஆகஸ்ட் ’25
அன்னை கன்னி மரியாவின் விண்ணேற்பு, பெருவிழா
திருவெளிப்பாடு 11:19அ, 12:1-6, 10அ. 1 கொரிந்தியர் 15:20-26. லூக்கா 1:39-56
இன்று அன்னை கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கிறோம். ‘மன்னவரின் மாளிகைக்குள் நுழைகிற’ பட்டத்து அரசியைப் புகழ்ந்து பாடுகிறது இன்றைய பதிலுரைப் பாடல் (காண். திபா 45). மன்னவரின் உடலைத் தன் மடியில் ஏந்துவதற்கு மரியா அனுமதித்ததால், மன்னவரின் மாளிகைக்குள் தன் உடலோடு செல்லும் பேறு பெறுகிறார்.
திருத்தந்தை 12-ஆம் பயஸ் அவர்கள், 1 நவம்பர் 1950 அன்று, ‘முனிஃபிசென்த்தேஸிமுஸ் தேயுஸ்’ (‘நன்மைநிறை கடவுள்’) என்னும் தன் திருத்தூது கொள்கைத்திரட்டில் இவ்வாறு அறிவிக்கிறார்: ‘கடவுளின் அமல அன்னை, என்றும் கன்னியான மரியா, இவ்வுலகின் வாழ்வை முடித்தபின்னர் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்தின் மாட்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என நாம் வரையறுத்து அறிவித்து ஆணையிடுகிறோம்.’
1854-ஆம் ஆண்டு வெளிவந்த ‘அன்னை கன்னிமரியின் அமல உற்பவத்தை’ கொண்டாடுகிற கொள்கைத்திரட்டின்மேலும், ‘கன்னி மரியா கடவுளின் தாய்’ என்னும் கருத்துருவின்மேலும் கட்டப்பட்டதே இந்த அறிக்கை. மரியா இறந்தாரா அல்லது இறப்பைக் காணாமல் நிலைவாழ்வுக்கு நுழைந்தாரா என்னும் கேள்வியை பதிலிறுக்காமல் விடுகிறது இந்த ஏடு.
கீழத்தேய பழம்பெரும் திருஅவையில் ‘அன்னை கன்னி மரியாவின் துயில்’ என்று இந்நிகழ்வு நினைவுகூரப்படுகிறது.
‘நம் உயிர்ப்பு பற்றிய நம்பிக்கையை ஆழப்படுத்துவதுடன் அதை எதிர்நோக்கியிருக்க நம்மைத் தூண்டுகிறது இப்பெருவிழா’ என எழுதுகிறார் திருத்தந்தை 12-ஆம் பயஸ். ‘அன்னை கன்னி மரியா தன் விண்ணேற்பின் வழியாக அவருடைய மகனின் உயிர்ப்பில் பங்கேற்றார். கிறிஸ்துவுடைய உடலின் உறுப்புக்களான நம் அனைவருடைய உயிர்ப்பின் முன்னோட்டமாக அவர் விண்ணேற்படைந்தார்’ எனக் கற்பிக்கிறது கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி (எண். 974).
மன்னவரின் மாளிகைக்குள் மரியா நுழைந்ததை இன்று நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.
மன்னவரைத் தன் மடியில் ஏந்துவதற்கு தன்னையே அர்ப்பணித்த அன்னை கன்னி மரியா, செக்கரியா-எலிசபெத்து இல்லம் நுழைவதை எடுத்துரைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். எலிசபெத்தின் மூன்று சொல்லாடல்கள் அன்னை கன்னி மரியாவின் விண்ணேற்பை நமக்குச் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றன:
அனைத்துப் பெண்களை (மக்களை) விட அன்னை கன்னி மரியா பேறு பெற்றவராக இருக்கக் காரணம் அவர் பாவத்திலிருந்து காப்பாற்றப்பட்டவராக இருக்கிறார். மேலும், படைப்பின் தொடக்கத்தில் நாம் காணும் முதல் பெண்ணான ஏவாளின் எதிர்நிழலாக இருக்கிறார் மரியா. ஏவாள் தன்னுடைய கீழ்ப்படிதலின்மையால் விலக்கப்பட்ட கனியை உண்டார், பாம்பின் சூழ்ச்சிக்குள் விழுந்தார். மரியா தன்னுடைய கீழ்ப்படிதலால் கடவுளின் கனி தன் வயிற்றில் வளர அனுமதித்தார். பாம்பின் தலையை மிதிக்கும் பேறு பெற்றாள்.
‘கடவுளின் தாய்’ என்னும் தலைப்பை மரியாவுக்கு முதன்முதலாக வழங்குபவர் எலிசபெத்து. எலிசபெத்தின் நம்பிக்கைப் பார்வையை நாம் இங்கே காண முடிகிறது. தூய ஆவியாரால் தூண்டப்பெற்ற எலிசபெத்து மரியாவின் வயிற்றில் தன் ஆண்டவரைக் காண்கிறார்.
‘ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்!’ என்று சொல்லி மரியாவின் நம்பிக்கை, பற்றுறுதி, சரணாகதி ஆகியவற்றை எடுத்துரைக்கிறார் எலிசபெத்து. மரியா தன் நம்பிக்கையால் கடவுளுக்கு ஏற்புடையவராகிறார். வரவிருப்பவற்றை ஏற்றுக்கொள்ளும் துணிவை அவருக்குத் தருகிறது அவருடைய நம்பிக்கை.
எலிசபெத்தின் வாழ்த்துச் சொற்களைக் கேட்கிற மரியா, அவருக்கு எந்தவொரு பதிலும் தரவில்லை. மாறாக, தன் பதிலை ஒரு பாடலாக கடவுளை நோக்கி எழுப்புகிறார். மரியாவின் உள்ளம் எப்போதும் விண்ணை நோக்கியதாக இருந்ததால், அவருடைய உடலும் விண்ணை நோக்கிச் சென்றது.
கடவுளின் இயல்பு, இருத்தல், மற்றும் இயக்கத்தை எடுத்துரைக்கிறது மரியாவின் பாடல்.
இயல்பு: அவரே ஆண்டவர், மீட்பர், எல்லாம் வல்லவர். தூயவர் என்பது அவர் பெயர்.
இருத்தல்: இரக்கமே அவருடைய இருத்தல். மக்களுக்குத் துணையாக நிற்கிறார்.
இயக்கம்: தாழ்நிலையைக் கண்ணோக்குகிறார், தோள்வலிமையைக் காட்டுகிறார், புரட்டிப் போடுகிறார், தூக்கி எறிகிறார், உயர்த்துகிறார், நிரப்புகிறார், வெறுமையாக்குகிறார்.
இறையாட்சியின் செயல்களை மரியா முன்னுரைக்கிறார். அவருடைய கனவு விடுதலையின், எழுச்சியின், விடியலின் கனவாக இருக்கிறது.
இன்றைய முதல் வாசகத்தில், கதிரவனை ஆடையாக அணிந்திருந்த பெண் பற்றிய காட்சியைக் காண்கிறார் யோவான். ‘பெண்’ என்பவர் இங்கே இஸ்ரயேல் மக்கள் குழுமத்தை, அல்லது திருஅவையைக் குறித்தாலும், திருஅவைத் தந்தையர்களுடைய புரிதலில் இவர் மரியாவையும் குறிக்கிறார். பெண்ணுக்கும் அரக்கப் பாம்புக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தை ஏவாள்-பாம்பு நிகழ்வோடும் பொருத்திப் பார்க்கலாம். அங்கே ஏவாள் பாம்பின் சூழ்ச்சிக்கு ஆளாகிறார். இங்கே மரியா பாம்பை வெல்கிறார்.
இரண்டாம் வாசகத்தில், ‘சாவே கடைசிப் பகைவன். அதுவும் அழிக்கப்படும்’ என உறுதிபடக் கூறுகிறார் பவுல். மரியாவின் விண்ணேற்பு சாவுக்கு அழிவாக மாறுகிறது.
(அ) மண்ணைத் தாண்டிய வாழ்க்கை. மண்ணையும் மண்ணுலகு சார்ந்தவற்றையும் நாடாமல், மண்ணைத் தாண்டிய வாழ்க்கை நோக்கிப் பயணம் செய்தல்.
(ஆ) மரியாவின் நம்பிக்கையும் சரணாகதியும் நமக்கு முன்மாதிரி. மரியா கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருந்தாலும் அந்த நிலைக்குத் தன்னையே தகுதியாக்கிக்கொள்கிறார்.
(இ) அகவிடுதலை. மரியாவின் பாடல் ஆண்டவராகிய கடவுள் இவ்வுலகில் நிகழ்த்தும் விடுதலைச் செயல்களைக் குறிப்பதாக அமைந்துள்ளது. இன்று நம் நாட்டின் (இந்தியா) (79-ஆவது) விடுதலைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். அகவிடுதலையே புறவிடுதலையின் அடிப்படை என்பதைக் கண்டுணர்வோம். அகவிடுதலை அடைந்தவரே புறவிடுதலையைக் கொண்டாட முடியும். அகவிடுதலை பெறாதவர் புறவிடுதலை பெற்றாலும் ஏதோ ஒன்றுக்கு அடிமையாகவே இருக்கிறார். மரியா போல ஆண்டவருக்கு மட்டும் அடிமையாக இருத்தல் நலம்!
பெருவிழா வாழ்த்துகள்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: