
இன்றைய இறைமொழி
சனி, 15 நவம்பர் ’25
ஆண்டின் பொதுக்காலம் 32-ஆம் வாரம், சனி
சாலமோனின் ஞானம் 18:14-16, 19:6-9. லூக்கா 18:1-8
இன்றைய நற்செய்தி வாசகம் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், மனந்தளராமல் எப்போதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொல்கின்றார். இரண்டாம் பகுதியில், ‘மானிட மகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?’ என்று தன் தயக்கத்தை வெளிப்படுத்துகின்றார்.
‘மனந்தளராமல்’ எப்போதும் இறைவனிடம் வேண்டுவதற்கு இயேசு ஓர் எடுத்துக்காட்டு தருகின்றார். நகரில் இருந்த நடுவர் ஒருவரிடம் கைம்பெண் தனக்கு நீதி வழங்கக் கேட்டுச் செல்கின்றார்.
உவமையில் வரும் நடுவர் கதையின் முரணாக இருக்கின்றார். அதாவது, மற்ற கதைமாந்தர்களின் இருத்தலை நேர்முகமாகக் காட்டுவதற்காக, இந்த நபரை எதிர்மறையாகப் பயன்படுத்துகின்றார் ஆசிரியர். இந்த நபர் தவறான மனப்பாங்கும், பிறழ்வான செயல்பாடும் கொண்டிருக்கின்றார். ‘கடவுளுக்கும் அஞ்சாமல், மனிதரையும் மதிக்காமல் இருப்பதே’ இவருடைய மனப்பாங்கு. மேலும், கைம்பெண் ஒருவர் தன்னிடம் நீதி கேட்டு வந்தபோது, நெடுங்காலமாய் எதுவும் செய்யாமல் இருக்கின்றார். ஆக, இவருடைய செயல்பாடும் பிறழ்வுபட்டதாக இருக்கிறது.
இயேசுவின் சமகாலத்தில் கைம்பெண்கள் தங்களின் கணவன் சொத்தைப் பெறுவதற்கு வழக்காட வேண்டியிருந்தது. அந்தப் பின்புலத்தில்தான் தனக்கு நீதி கிடைக்க இந்த நடுவரிடம் செல்கின்றார் கைம்பெண்.
இயேசு குறிப்பிடும் நடுவரின் வாழ்க்கை இலக்கு சற்று வித்தியாசமாக இருக்கிறது: ‘அவர் கடவுளுக்கும் அஞ்சுவதில்லை. மனிதர்களையும் மதிப்பதில்லை.’ வித்தியாசமானதாக இருக்கிறது இது. இப்படிப்பட்ட மனிதர்களாக இருந்தால் வாழ்வு எத்தனையோ நலம்! கடவுளுக்கு அஞ்சுவதால் நமக்கு தேவையற்ற குற்றவுணர்வு வருகிறது. மனிதர்களை மதிப்பதால் தேவையற்ற மனப்பாரம் வருகிறது. கடவுளும் தேவையில்லை. மனிதர்களும் தேவையில்லை. நாம் இப்படித்தான் படைக்கப்பட்டோம். ஆனால், காலப்போக்கில் கடவுளும், மனிதர்களும் இல்லாமல் நம்மால் வாழ முடியாது என்பதுபோல வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
நிகழ்வுக்கு வருவோம்.
இப்படிப்பட்ட ஒரு தத்துவ ஞானியிடம் மாட்டிக்கொண்ட கைம்பெண் தொடர்ந்து வேண்டுகிறார்.
நாம் ஒரு வேலையை முடிக்க இரண்டு காரணங்கள்தாம் உள்ளன:
அ. கடவுளுக்கு அச்சம்
ஆ. நமக்கு மேல் இருக்கும் மனிதர்களுக்கு மதிப்பு
இந்த இரண்டும் இருப்பதால்தான் நாம் வேலையைக் குறித்த காலத்தில் செய்து முடிக்கிறோம். இந்த நடுவரிடம் இந்த இரண்டும் இல்லை. ‘கடவுளுக்கு அஞ்சுபவராக’ இருந்தால், ‘நீர் செய்வது திருச்சட்டத்திற்கு எதிரானது’ என்று கடவுளை மையப்படுத்தி முறையிட்டிருப்பார் கைம்பெண். அல்லது ‘மனிதர்களை மதிப்பவராக’ இருந்தால், ‘உனக்கு மேலதிகாரியிடம் சொல்லி விடுவேன்’ என மிரட்டியிருப்பார் கைம்பெண். ஆனால், இந்த இரண்டிற்கும் வழியில்லாததால், அந்தப் பெண் மூன்றாவது ஆயுதத்தைத் கையில் எடுக்கிறார். அதுதான் ‘விடாமுயற்சி.’ இங்கே, ‘ஒருவரின் விடாமுயற்சி மற்றவருக்குத் தொல்லை’ என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, ‘ஒருவரின் மனவுறுதி மற்றவரின் பிடிவாதம்’ என்பதைப் போல.
கைம்பெண்ணின் விடாமுயற்சியைத் தொல்லையாக உணரும் நடுவர் நீதி வழங்குகிறார்.
ஆனால், கடவுள் அப்படிப்பட்டவர் அல்லர் என்கிறார் இயேசு.
மேலும், இறுதியில், ‘ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?’ என்ற தன் ஏக்கத்தையும் வெளிப்படுத்துகிறார்.
கைம்பெண்ணின் விடாமுயற்சியை உந்தித் தள்ளியது நம்பிக்கையே.
இங்கே, கைம்பெண் தனக்குரிய நீதியைப் பெற உரிமைகொண்டிருக்கின்றார். ஆனால், அவருடைய உரிமை மறுக்கப்படுகின்றது. எந்தப் பொறுப்புணர்வும் இல்லாத ஒருவர்கூட இறுதியில் மற்றவருக்குரிய உரிமையை வழங்கத் தயாரகின்றார்.
ஆண்டவராகிய கடவுள் நமக்கு உரிமைகள் இல்லை என்றாலும், நமக்கு உடனடியாகச் செவிசாய்க்கின்றார். கடவுளின் நன்மைத்தனம் பொறுப்பற்ற நடுவரின் முரண் எனக் காட்டப்படுகிறது.
தொடர்ந்து, மண்ணுலகில் நம்பிக்கை மறைந்து வருவதையும் இயேசு சுட்டிக்காட்டுகின்றார்.
இறைவனிடம் மன்றடும்போது, நாம் விண்ணப்பம் செய்யும்போது நம் மனப்பாங்கு நம்பிக்கை கொண்டதாகவும், நம் செயல்பாடு மனந்தளராமலும் இருத்தல் வேண்டும்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: