• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்னுமா புரியவில்லை? இன்றைய இறைமொழி. செவ்வாய், 17 பிப்ரவரி ’26.

Tuesday, February 17, 2026   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
செவ்வாய், 17 பிப்ரவரி ’26
பொதுக்காலம் ஆறாம் வாரம், செவ்வாய்
யாக் 1:12-18. மாற் 8:14-15

 

இன்னுமா புரியவில்லை?

 

இயேசுவின் வல்ல செயல்களைக் காண்கிற மக்கள் கூட்டம், ‘இவர் யாவற்றையும் நன்றாக செய்கிறார்!’ என்று புகழ்கிறது. ஆனால், இயேசுவுக்கு அருகிலிருந்த அவருடைய சீடர்கள் அவர் யாரென அறிந்துகொள்ளவில்லை. மாற்கு நற்செய்தியாளர் இயேசுவின் சீடர்களின் இயலாமையையும் நொறுங்குநிலையையும் நன்றாகப் பதிவு செய்கிறார். இயேசுவின் சீடர்கள் அவரைப் புரிந்துகொள்ளாமல் இருப்பார்கள், அல்லது தவறாகப் புரிந்துகொள்வார்கள்.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் படகில் இருக்கிறார்கள். ‘பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்!’ என்று கட்டளையிடுகிறார். இங்கே ‘புளிப்பு மாவு’ என்பதை அவர்களுடைய ‘வெளிவேடம், பகைமையுணர்வு’ ஆகியவற்றின் உருவகமாக மொழிகிறார் இயேசு. உருவகத்தின் பொருள் சீடர்களுக்குப் புரியவில்லை. புரியவில்லை என்பதை இயேசுவிடம் கூறவில்லை. மேலும், தங்களிடம் உள்ள அப்பத்தின் குறைபாட்டை எண்ணிப் பார்க்கிறார்கள். அப்பங்களைப் பலுகச் செய்கிறவர் தங்கள் நடுவே இருக்கிறார் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

 

‘இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?’ என்னும் இயேசுவின் இறுதிக் கேள்வி சீடர்களை நோக்கியதாகவும் வாசகர்களாகிய நம்மை நோக்கியதாகவும் உள்ளது.

 

இன்றைய முதல் வாசகத்தில், சோதனைகள் பற்றிய விளக்கத்தைத் தருகிறார் யாக்கோபு. அன்று தொடங்கி இன்று வரை நமக்கு வருகிற சோதனைகள் அல்லது துன்பங்களுக்குக் காரணம் கடவுள் என்று நாம் நினைக்கிறோம். கடவுளே நமக்குத் துன்பங்களை அனுப்புகிறார் அல்லது அனுமதிக்கிறார் என்பது நம் புரிதல். இதை மறுக்கிற யாக்கோபு, ‘நல்ல கொடைகள் அனைத்தும் கடவுளிடமிருந்து வருகின்றன,’ நாம் அனுபவிக்கும் சோதனைகள் நம்மால் தெரிந்துகொள்ளப்படுபவை என்கிறார். பாவ நாட்டத்தை நாம் கட்டுப்படுத்தாதபோது அது வளர்ந்து பாவமாக மாறி, நமக்குச் சாவை வருவிக்கிறது. ஒவ்வொரு பொழுதும் நம் வாழ்வின் நகர்வுகளுக்கு நாமே பொறுப்பு என்கிறார் யாக்கோபு.

 

நாம் கற்க வேண்டிய பாடங்கள் எவை?

 

நம் உள்ளத்தில் உள்ள கவலை, விரக்தி, சோர்வு போன்றவை நமக்கு நேரும் நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள இயலாமல் செய்கிறது. கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதைப் பல நேரங்களில் மறந்துவிடுகிறோம். பாவ நாட்டங்கள் பற்றிய விழிப்பு நிலை நாம் சோதனையில் விழாதாவாறு நம்மைக் காத்துக்கொள்கிறது.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: