• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

நிலைவாழ்வும் நிறைவும். இன்றைய இறைமொழி. திங்கள், 17 ஆகஸ்ட் 2026.

Monday, August 17, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
திங்கள், 17 ஆகஸ்ட் 2026
பொதுக்காலம் 20-ஆம் வாரம்
எசே 24:15-24. மத் 19:16-22

 

நிலைவாழ்வும் நிறைவும்

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இளைஞர் ஒருவர் இயேசுவிடம் வருகிறார். ‘நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?’ எனக் கேட்கிறார். ‘கட்டளைகளைக் கடைப்பிடியும்!’ என்கிறார் இயேசு. கட்டளைகளைக் கடைப்பிடிப்பதாகச் சொல்கிற இளைஞர் இன்னும் தன்னிடம் ஏதோ ஒன்று குறைவுபடுவதாக நினைக்கிறார். நிறைவுள்ளவராக விரும்பினால் அனைத்தையும் இழக்க வேண்டும் என்று இயேசு அறிவுறுத்த, அந்த இளைஞர் வருத்தத்தோடு செல்கிறார்.

 

சீடத்துவத்தின் இரண்டு கூறுகளை நாம் இங்கே பார்க்கிறோம்: ஒன்று, சட்டங்களைப் பின்பற்றும் சீடத்துவம். இரண்டு, கடவுளை முழுமையாகப் பற்றிக்கொள்ளும் சீடத்துவம். செல்வம் தருகிற பாதுகாப்பையும் மதிப்பையும் இழப்பதற்கு இளைஞர் தயாராக இல்லை. கண்ணுக்குப் புலப்படாத நிலைவாழ்வையும் நிறைவையும் விட கண்ணுக்குப் புலப்படுகிற செல்வம் அவருக்கு மேன்மையாகத் தெரிகிறது. பாதி வழி வந்தவர் மீதி வழி வர இயலாமல் தன் வழியே செல்கிறார்.

 

செல்வம் என்பது சீடத்துவத்துக்கு ஒரு தடை என்பதும், நிறைவாக மாற வேண்டுமெனில் நம்மிடம் உள்ளதைக் குறைக்க வேண்டும் என்பதும் இயேசு தருகிற பாடம்.

 

இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசேக்கியேலுடைய மனைவியின் இறப்பும் இறைவாக்கினரின் துக்கமும் நாடுகடத்தலுக்கான அடையாளங்களாக வழங்கப்படுகின்றன.

 

இன்றைய பதிலுரைப்பாடல் மோசேயின் பாடலிலிருந்து (இச 32) எடுக்கப்பட்டுள்ளது. ‘உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்!’ என இஸ்ரயேல் மக்களின் குறையைச் சுட்டிக்காட்டுகிறார் மோசே. அன்று முதல் இன்று வரை கடவுள் தருகிற அழைப்பும் விண்ணப்பமும் வாக்குறுதியும் நிராகரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: