
இன்றைய இறைமொழி
செவ்வாய், 19 மே 2026
பாஸ்கா காலம் ஏழாம் வாரம்
திப 20:17-27. யோவா 17:1-11
‘இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள்.’
பிரியாவிடைப் பேருரையின் இறுதியில் தம் சீடர்களுக்காக இறைவேண்டல் செய்கிற இயேசு உலகில் தாம் இருப்பதற்கான நேரம் முடிந்துவிட்டதையும் அவர் தந்தையிடம் திரும்ப வேண்டும் என்பதையும் இறைவேண்டல் வழியாகக் கூறுகிறார். இங்கே ‘உலகம்’ என்பது ‘காலமும் இடமும்’ எனப் பொருள்படுகிறது. இயேசுவின் பணிக்காலம் முடிவு பெறுகிறது. இந்த இடத்திலிருந்து தந்தையின் இடத்திற்குத் திரும்பிச் செல்கிறார் இயேசு. ஆனால், இதற்கு மாறாக, சீடர்கள் ‘உலகில்’ இருப்பார்கள். அதாவது, அவர்களுடைய காலம் தொடரும், அவர்களுடைய இடங்களும் தொடரும். காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்டிருக்கிற சீடர்கள் உலகு என்பதைக் கடவுளின் இயங்குதளமாகக் கொண்டு வாழ வேண்டும்.
கிறிஸ்தவ இறையியல் கடந்த காலத்தில் ‘உலகு வெறுத்தல்,’ ‘உலகு நிராகரித்தல்’ என்றே நமக்குக் கற்பித்தது. உலகம் என்பது வெறுப்புக்கும் நிராகரிப்புக்கும் உரியது அல்ல. மாறாக, மனிதர்களாகிய நாம் இயற்கையோடும் ஒருவர் மற்றவரோடும் உறவு கொள்வதற்கான தளமே உலகம். படைப்பின் தொடக்கத்தில் ஆண்டவராகிய கடவுள் முதல் மனிதரைப் படைத்தபோது உடலோடு அவரை இந்த உலகத்தில் நிறுத்துகிறார். நாம் காலூன்றி இந்த உலகில் நிற்கும்போதுதான் கனிதர இயலும்.
‘அகமகிழ்ந்து அக்களியுங்கள்’ (கௌதேத்தே எத் எக்சுல்தாத்தே) என்னும் திருத்தூது ஊக்கவுரையில், ‘இன்றைய உலகில் புனிதத்துக்கான அழைப்பு’ என்னும் கருத்தில் சிந்திக்கிற திருத்தந்தை பிரான்சிஸ், ‘விடாமுயற்சி, பொறுமை, கனிவு, மகிழ்ச்சி, புன்னகை உணர்வு, துணிவு, உந்துணர்வு, குழும வாழ்வு, குடும்ப உறவு, இறைவேண்டல்’ (காண். எண்கள் 112-157) வழியாக நாம் இந்த உலகில் புனிதத்தின் அடையாளங்களாக வாழ வேண்டும் என்று அழைக்கிறார்.
இன்றைய முதல் வாசகத்தில் தான் வாழ்ந்த எபேசு என்னும் உலகத்திலிருந்து விடைபெறுகிறார் பவுல். ‘மிகுந்த மனத்தாழ்மையோடும் கண்ணீரோடும் ஆண்டவருக்குப் பணிபுரிந்தேன் … என்னைப் பொருத்த வரையில் எனது உயிரை ஒரு பொருட்டாக நான் மதிக்கவில்லை. இறையருளைப் பற்றிய நற்செய்திக்குச் சான்று பகருமாறு ஆண்டவர் இயேசு எனக்குக் கொடுத்த பணியை நிறைவேற்றி என் வாழ்க்கை ஓட்டத்தை முடிப்பதே என் விருப்பம்’ என்கிறார். தான் இருக்கிற இடத்தை இறையாட்சியின் விழுமியங்களால் அணிசெய்தார் பவுல்.
நாம் வாழும் குடும்பம், நாம் செய்யும் பணி, படிக்கும் படிப்பு, கொண்டிருக்கும் நண்பர்கள், நம் ஊர், நம் பங்கு இவையே நம் உலகம். இந்த உலகத்தில் நாம் வேரூன்றுகிறோம், வளர்கிறோம், கனி தருகிறோம். உலகின் போக்கு வியாபாரம் சார்ந்ததாக, இன்பம் நாடுவதாக இருந்தாலும் நம் உலகத்தை நாம் அமைதியாலும் மகிழ்ச்சியாலும் அணி செய்ய முடியும். நம் சிறிய உலகத்தை நாம் ஏற்றுக்கொண்டு அந்த உலகத்தை நம் இருத்தலாலும் செயல்பாடுகளாலும் கொஞ்சம் மாற்ற முயற்சி செய்வோம்.
‘கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்?’ (திப 1:10)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி
Source: Rev. Fr. Yesu Karunanidhi
Share: