• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

பெண்களின் சீடத்துவம். இன்றைய இறைமொழி. வெள்ளி, 19 செப்டம்பர் ’25.

Friday, September 19, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

நம்பிக்கை புனித மகதலா மரியா தாராள உள்ளம் நன்றியுணர்வு நல்ல சீடத்துவம் பெண்களின் சீடத்துவம் சீடத்துவ பெண்மை செயல்களின் சீடத்துவம் மாற்றம் பெற்றோர் பெண்களின் பங்கேற்பு பகிர்ந்தளிக்கும் பண்பு

இன்றைய இறைமொழி
வெள்ளி, 19 செப்டம்பர் ’25
பொதுக்காலம் 24-ஆம் வாரம், வெள்ளி
1 திமொத்தேயு 6:2-12. லூக்கா 8:1-3

 

பெண்களின் சீடத்துவம்

 

இயேசுவின் பணிவாழ்வில் அவரோடு உடன் பயணித்த பெண்கள் மற்றும் அவர்களுடைய சீடத்துவம் பற்றி எடுத்துரைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இயேசுவின் போதனைகள் மற்றும் வல்ல செயல்கள் பற்றிப் பலர் பரவசம் அடைந்தாலும், அவரைப் பின்பற்றியவர்கள் என்னவோ சிலர்தாம். அவர்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்களின் சீடத்துவம் பற்றி இன்று சிந்திப்போம்.

 

இயேசுவைப் பின்பற்றிய பெண்கள் எனப் பெயர்களைப் பட்டியலிடுகிறார் லூக்கா. இவர்கள் வெறும் பார்வையாளர்கள் அல்ல, மாறாக, பணியில் பங்கேற்பாளர்கள். இயேசுவுக்கு ஆன்மிக அளவிலும், பொருள் அளவிலும் துணைநின்றார்கள்.

 

இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் இறந்த காலம் இருந்தது. அந்த இறந்தகாலத்திலிருந்து அவர்கள் விடுபட்டிருந்தனர். பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் விடுதலை பெற்ற பெண்கள், ஏழு பேய்களிடமிருந்து விடுபட்ட மகதலா மரியா என ஒவ்வொருவருக்கும் ஓர் இறந்தகாலம் இருந்தது. இயேசுவின் பரிவாலும் இரக்கத்தாலும் அவர்கள் மாற்றம் பெற்றார்கள்.

 

இவர்கள் தாராள உள்ளம் கொண்டவர்களாக இருந்தார்கள். இயேசுவின் பணிகளையும் பயணங்களையும் செலவினங்களையும் தங்கள் தாராள உள்ளத்தால் தாங்கிக்கொண்டவர்கள் இவர்கள். இவர்களுடைய வாழ்வில் இயேசு ஏற்படுத்திய மாற்றத்திற்கான கைம்மாறாகவோ, அல்லது நம்பிக்கை மற்றும் நன்றியுணர்வின் அடிப்படையாலோ அவ்வாறு செய்தனர்.

 

இவர்கள் இயேசுவின் சொற்களுக்கு வெறுமனே செவிமடுத்து நகர்ந்து செல்லவில்லை. மாறாக, தங்கள் நற்செயல்களால் அவற்றுக்குப் பதிலிறுப்பு செய்தார்கள்.

 

யாருடைய கருத்துக்காகவும், விமர்சனத்துக்காகவும் உட்பட்டு தங்களின் வாழ்க்கையின் போக்கை அவர்கள் மாற்றிக்கொள்ளவில்லை. அவர்களுடைய சமூகத்தில் ரபிக்களைப் பெண்கள் பின்பற்றுவது ஏற்புடையது அல்ல எனக் கருதப்பட்டாலும் அவர்கள் துணிவுடன் செயல்பட்டார்கள் பயந்து பின்வாங்கவில்லை.

 

சீடத்துவம் என்பது பாலினத்தையும் சமூக நிலையையும் பழைய வாழ்க்கையையும் சார்ந்தது அல்ல, மாறாக, அவற்றைக் கடந்தது என்பதை இவர்கள் நமக்கு உணர்த்துகிறார்கள். தம்மேல் அன்புகூறும் நம்பிக்கை கொள்ளும் அனைவரையும் கடவுள் ஏற்றுக்கொள்கிறார். சீடத்துவம் என்பது தனிநபர் வாழ்வு மாற்றத்தையும் கடவுளின் அரசில் ஈடுபாட்டுடன் பங்கேற்பதையும் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தவர்களாக இருந்தார்கள் இவர்கள்.

 

இன்றைய நற்செய்திப் பகுதி நமக்குத் தரும் பாடங்கள் எவை?

 

(அ) பெண்களின் பங்கேற்பு நம் வாழ்வுக்கும் பணிக்கும் அவசியமானதாக இருக்கிறது என்பதை உணர்தல் வேண்டும். அவர்கள் செய்கிற பணிகளை நாம் அங்கீகரிக்க வேண்டும்.

 

(ஆ) இப்பெண்கள் போல நாமும் தாராள உள்ளம் கொண்டவர்களாக நம் ஆற்றல், நேரம், பொருள் ஆகியவற்றைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.

 

(இ) நம் எப்படி இருந்தோம் அல்லது இருக்கிறோம் என்பதல்ல, மாறாக, எப்படி மாறுகிறோம் என்பதே கடவுள் நம்மிடம் விரும்புவது என்பதை உணர்தல் வேண்டும்.

 

(ஈ) சீடத்துவம் என்பது வெறும் சொற்களில் அல்ல, மாறாக, செயல்களில் அடங்கியுள்ளது என்பதை அறிதல் வேண்டும்.

 

இன்றைய முதல் வாசகத்தில், ‘பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர்’ என்கிறார் பவுல். பொருள் ஆசையை தங்களுடைய பகிர்ந்தளிக்கும் பண்பால் வெற்றிகொண்டு, நற்செயல்களுக்குப் பயன்படுத்துகிறார்கள் நற்செய்தியில் நாம் காணும் பெண்கள்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: