• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

உண்மையினால் அர்ப்பணமாக்குதல். இன்றைய இறைமொழி. புதன், 20 மே 2026.

Wednesday, May 20, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
புதன், 20 மே 2026
பாஸ்கா காலம் ஏழாம் வாரம்
திப 20:28-38. யோவா 17:11-19

 

உண்மையினால் அர்ப்பணமாக்குதல்

 

‘உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை.’

 

இயேசு தம் இறுதி இராவுணவுப் பேருரையில் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார், அவர்களுக்காக இறைவேண்டல் செய்கிறார், அவர்களைக் கடவுளுக்கு அர்ப்பணமாக்குகிறார். ‘அர்ப்பணமாக்குதல்’ என்றால் ‘ஒதுக்கி வைத்தல், புனிதப்படுத்துதல், நேர்ந்தளித்தல்’ என்று பொருள்படும். திருப்பலியில் நாம் அப்பத்தையும் இரசத்தையும் கடவுளுக்கு அர்ப்பணமாக்குகிறோம். துறவற வார்த்தைப்பாடு வழியாக அருள்சகோதரிகளும் துறவியர்களும் தங்களுடைய வாழ்வைக் கடவுளுக்கு அர்ப்பணமாக்குகிறார்கள். புதியதாகக் கட்டிய ஆலயத்தை நாம் அர்ப்பணமாக்குகிறோம். நாம் எழுதிய புத்தகம் ஒன்றை நமக்குப் பிடித்தமானவர்களுக்கு அர்ப்பணிக்கிறோம். அர்ப்பணமாக்கப்படுகிற ஒன்று ஒருவருடைய உடைமையிலிருந்து மற்றவருடைய உடைமையாக மாறுகிறது. இங்கே சீடர்கள் – அவர்களோடு இணைந்து நாம் – கடவுளுக்கு அர்ப்பணமாக்கப்படுகிறார்கள். ஆக, இனி அவர்கள் கடவுளுக்கு உரியவர்கள். ‘உண்மையினால்’ என்பதை அவர்களுடைய இயல்பு நிலையினால் எனப் புரிந்துகொள்வோம். மேலும் ‘கடவுளுடைய வார்த்தையே உண்மை’ என்ற பொருளையும் இயேசு தருகிறார். கடவுளின் வார்த்தை என்பது விவிலியம் மட்டுமல்ல. நம் மனச்சான்றின் ஒலி, பெரியவர்களின் வழிகாட்டுதல், திருஅவையின் போதனை, இயற்கை என கடவுளின் வார்த்தை நம் நடுவே ஒலித்துக்கொண்டே இருக்கிறது. கடவுளுக்கு அர்ப்பணமாக்கப்பட்ட சீடர்களாகிய நாம் தாழ்ந்தவற்றை விடுத்து மேலானதை, மனிதர்கள் சார்ந்தவற்றை விடுத்துக் கடவுள் சார்ந்தவற்றையும் பற்றிக்கொள்ள வேண்டும்.

 

துறவு வாழ்வின் புத்தாக்கம் பற்றிப் பேசுகிற ‘அன்பின் நிறைவு’ (பெர்ஃபெக்தே காரித்தாதிஸ்) என்னும் இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடு, ‘துறவற அர்ப்பணம் என்பது நம் திருமுழுக்கின் அர்ப்பணத்தை நிறைவு செய்கிறது. தற்கையளிப்பு, தன்னையே வெறுமையாக்குதல், சரணாகதி அடைதல் வழியாகவே, துறவியர் மட்டுமல்ல, நாம் அனைவரும் கடவுளுக்கு அர்ப்பணமாக்கப்படுகிறோம்’ (காண். எண் 5) என மொழிகிறது.

 

கொல்கத்தா நகர் அன்னை தெரசா ஆசிரியப் பணிக்காக நம் நாட்டுக்கு வந்தார். ஆனால், தன் பணி சமூகப் பணி என்பதை உணர்ந்தவுடன் தன் பாதையை மாற்றுகிறார். தன் வாழ்வின் நோக்கத்தைத் தழுவிக்கொள்கிறார். மோசே, பவுல் என்னும் மாந்தர்களும் தங்கள் வாழ்வின் உண்மையைக் கண்டறிந்து அதன் வழியாக, அதற்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணமாக்கினார்கள்.

 

இன்று நாம் வாழ்கிற உலகம் பொய்மையால் நம்மைத் தழுவிக்கொள்கிறது. போலி, இரட்டை வேடம், மிகைப்படுத்துதல் போன்றவற்றால் நம் இருத்தலையும் இயக்கத்தையும் நிர்ணயிக்கிறது. வாழ்வின் மகிழ்ச்சியும் சுதந்திரமும் நமக்கு உண்மை வழியாகவே வருகின்றன என்பதை நாம் உணர்ந்து, ‘உண்மையால்’ நம் ஒவ்வொரு பொழுதையும் அர்ப்பணிக்க முன்வருவோம்.

 

இன்றைய முதல் வாசகத்தில் பவுல் மிலேத்துவில் எபேசின் மூப்பர்களுக்கு வழங்கிய பிரியாவிடை உரை தொடர்கிறது. மூப்பர்கள் கடவுளின் மந்தையைக் காத்து உண்மையை நிலைநாட்ட வேண்டும் என அறிவுறுத்துகிற பவுல், ‘எவருடைய பொன்னுக்கோ வெள்ளிக்கோ ஆடைக்கோ நான் ஆசைப்பட்டதில்லை. என்னுடைய தேவைகளுக்காகவும் என்னோடு இருந்தவர்களுடைய தேவைகளுக்காகவும் இந்த என் கைகளே உழைத்தன’ என்று தன் கண்ணியத்தையும் நேர்மையையும் அறிக்கையிடுகிறார். ‘பெற்றுக்கொள்வதைவிடக் கொடுத்தலே பேறுடைமை’ என்று ஆண்டவர் இயேசு கூறியதை நினைவுறுத்துகிறார். இயேசுவின் இக்கூற்று நற்செய்தி நூல்களில் பதிவுசெய்யப்படவில்லை. வாய்மொழி மரபில் வழக்கிலிருந்த ஒரு கூற்றாக இருக்கலாம். பெற்றுக்கொள்பவரைவிடக் கொடுப்பவர் அனைத்தின்மேலும் அதிகாரம் கொண்டவராக இருக்கிறார்.

 

‘நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்.’ (மாற் 1:24)

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: