• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

தகுதிப்படுத்துதல்!. இன்றைய இறைமொழி. வியாழன், 20 ஆகஸ்ட் 2026.

Thursday, August 20, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
வியாழன், 20 ஆகஸ்ட் 2026
பொதுக்காலம் 20-ஆம் வாரம்
எசே 36:23-28. மத் 22:1-14

 

தகுதிப்படுத்துதல்!

 

மத்தேயு நற்செய்தியில் ‘தோழரே’ (கிரேக்கத்தில், ‘ஹெதய்ரோஸ்,’ அழைப்புச் சொல்லாக ‘ஹெதய்ரே’) என்னும் சொல் மூன்று இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. புதிய ஏற்பாட்டில் இச்சொல் மத்தேயு நற்செய்தியில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘நண்பர்,’ ‘சகா,’ ‘உடனுழைப்பாளர்’ எனவும் இச்சொல்லை மொழிபெயர்க்கலாம்.

 

(அ) திராட்சைத் தோட்டப் பணியாளர் எடுத்துக்காட்டு (நேற்றைய நற்செய்தி வாசகம்)

 

அவரோ (நிலக்கிழார்) அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா?’ என்றார் (மத் 20:13).

 

(ஆ) திருமண விருந்து எடுத்துக்காட்டு (இன்றைய நற்செய்தி வாசகம்)

 

அரசர் அவனைப் பார்த்து, ‘தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?’ என்று கேட்டார் (மத் 22:12).

 

(இ) கெத்சமேனித் தோட்டம்

 

யூதாசு நேராக இயேசுவிடம் சென்று, ‘ரபி வாழ்க’ என்று கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான். இயேசு அவரிடம், ‘தோழா, எதற்காக வந்தாய்?’ என்று கேட்டார் (மத் 26:50)

 

மேற்காணும் மூன்று நிகழ்வுகளிலுமே ‘தோழா’ என்னும் சொல் ‘முரண் சொல்லாக’ பயன்படுத்தப்பட்டுள்ளது – அதாவது, தோழராக இருக்க வேண்டியவர் தோழராக இல்லை என்று மற்றவருக்கு நினைவூட்டுவதாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

நிலக்கிழாரின் புரட்டிப் போடுதலைப் புரிந்துகொள்ளவில்லை முதல் தோழர்.

 

திருமண ஆடை தனக்கு வழங்கப்பட்டாலும் அதைப் பொருட்படுத்தவில்லை இரண்டாம் தோழர்.

 

கடைசி வரை இயேசுவை வெறும் போதகராக (ரபி) மட்டுமே பார்த்தார் யூதாசு என்னும் மூன்றாம் தோழர்.

 

நிற்க.

 

நேற்றைய எடுத்துக்காட்டின் நிறைவுப் பகுதி நமக்கு இடறலாக இருந்ததுபோல, இன்றைய எடுத்துக்காட்டின் நிறைவுப் பகுதியும் இடறலாக இருக்கிறது.

 

திருமண ஆடை அணியாத ஒருவனைக் காணும் அரசர், ‘தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?’ எனக் கேட்டு, இருளில் தள்ளுகின்றார்.

 

அழைத்தவர்கள் அனைவரும் வர மறுக்கின்றனர். அவர்கள் தீக்கிரையாக்கப்படுகின்றனர். வந்தவர்களில் ஒருவர் திருமண ஆடை இன்றி ஒருவர் வருகின்றார். அவர் இருளில் தள்ளப்படுகின்றார்.

 

இங்கே இரண்டு விடயங்கள் புரிதலுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை:

 

(அ) அழைத்தலை நிராகரிப்பதும் தவறு – அழைத்தலை நிராகரித்தவர்கள் அரசனை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அவர்களது முதன்மைகள் வேறாக இருந்தன.

 

(ஆ) அழைத்தலுக்கு நம்மைத் தகுதியாக்க மறுப்பதும் தவறு – அழைத்தல் பெற்று விருந்தில் பங்கேற்றவர்களுள் ஒருவர், தனக்குக் கொடுக்கப்பட்ட விருந்து ஆடையை அணியை மறுக்கின்றார். ஆக, அவரும் அரசனை ஒரு பொருட்டாகக் கருதவில்லை.

 

‘திருமண ஆடை’ என்பதை நாம் இங்கே உருவகமாகவே புரிந்துகொள்ள வேண்டும். தகுதியான அல்லது தகுதிப்படுத்தப்பட்ட வாழ்வே திருமண ஆடை. மத்தேயு குழுமத்தில் நிலவிய ஒரு பிரச்சினைக்கான தீர்வையே நாம் இங்கே காண்கிறோம். கிறிஸ்தவ நம்பிக்கையைத் தழுவுதல் என்பது தானாகவே நடக்கும் ஒரு செயல் அல்ல. மாறாக, அந்த நம்பிக்கைக்கு ஒருவர் தன்னைத் தயார்படுத்த வேண்டும்.

 

தகுதிப்படுத்துதல் சிறிய அளவில்தான் தொடங்க வேண்டும். திருமண ஆடை அணிதல் போல.

 

ஏனெனில், ‘சிறியவற்றைப் புறக்கணிப்போர் சிறிது சிறிதாய் வீழ்ச்சி அடைவர்’ (காண். சீஞா 19:1)

 

நாம் பெற்றிருக்கிற நம்பிக்கை கொடை என்றாலும், அந்தக் கொடைக்கு நம்மையே தகுதிப்படுத்திக்கொள்தல் நம்முடைய கடமை ஆகும்.

 

இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களுக்கு புதிய இதயத்தை அருள்வதாக வாக்களிக்கிறார் கடவுள். பழையதை அகற்றிவிட்டு புதியதை ஏற்றுக்கொள்தலும் தகுதிப்படுத்தலுக்கான ஒரு வழியே!

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: