
இன்றைய இறைமொழி
சனி, 21 நவம்பர் 2026
கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல், நினைவு
செக் 2:10-13. மத் 12:46-50
இன்றைய அன்னை கன்னி மரியா எருசலேமில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட நிகழ்வை நினைவுகூர்ந்து கொண்டாடுகிறோம். இந்த நிகழ்வு பற்றிய குறிப்புகள் நற்செய்தி நூல்களில் இல்லை. ஆனால், ‘யாக்கோபின் முதன்மை நற்செய்தி’ என்றழைக்கப்படுகிற ஏற்றுக்கொள்ளப்படாத நூலில் இந்நிகழ்வு பற்றிய குறிப்புகளைக் காண்கிறோம்.
சுவக்கீமும் அன்னாவும் பல ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருக்கிறார்கள். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரிடம் இறைவேண்டல் செய்து அவர்கள் ஒரு பொருத்தனை செய்கிறார்கள். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால் அதை ஆண்டவருக்கு அர்ப்பணிப்பதாக வாக்குறுதி கொடுக்கிறார்கள். அவர்களுக்குப் பிறக்கிற பெண் குழந்தைக்கு ‘மிர்யம்’ (‘மரியா’) என்று பெயர் சூட்டுகிறார்கள். குழந்தைக்கு மூன்று வயதானபோது அவரைக் காணிக்கையாக அர்ப்பணிப்பதற்கு எருசலேம் அழைத்துச் செல்கிறார்கள் அவருடைய பெற்றோர். அங்கே மூன்று வயதுக் குழந்தையான மரியா எருசலேம் ஆலயத்தின் 15 படிகளைத் தாமே ஏறிச் செல்கிறார். தலைமைக்குரு அவரை வரவேற்று ஆலயத்துக்குள் ஏற்றுக்கொள்கிறார். அன்று தொடங்கி யோசேப்புக்கு நிச்சயம் செய்யப்படும்வரை ஆலயத்தில் தங்கியிருக்கிறார் மரியா.
இந்தக் கொண்டாட்டம் நமக்குத் தரக்கூடிய பாடங்கள் எவை?
இயேசு என்னும் ஆண் குழந்தை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டதுபோல மரியா என்னும் பெண் குழந்தையும் ஆண்டவருக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. ஆண்டவருடைய திருமுன்னிலையில் அனைத்துக் குழந்தைகளுக்கும் இடம் உண்டு.
மிர்யம் என்னும் குழந்தை தாமாவே எருசலேம் ஆலயத்திற்குள் ஏறிச் செல்கிறார். குழந்தையின் தன்னாட்சி இங்கே வியப்புக்குரியது. குழந்தைகள் அவர்களுடைய வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் பெரியவர்களைச் சார்ந்திருந்தாலும் அவர்களுக்கென்று உள்ள தன்னாட்சி உணர்வை நாம் மதிக்க வேண்டும்.
நற்செய்தி வாசகத்தில், இரத்த உறவைத் தாண்டிய புதிய உறவைப் பற்றிப் பேசுகிறார் இயேசு. கடவுளுடைய திருவுளத்துக்குக் கீழ்ப்படிவதன் வழியாக ஒருவர் இயேசுவின் தாயாகவும் சகோதரராகவும் மாறுகிறார்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி
Source: Rev. Fr. Yesu Karunanidhi
Image courtesy: The-Presentation-of-the-Virgin-Mary-by-Titian-1534-38-Gallerie-dellAccademia-Venice.jpg
Share: