• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

ஒளி கிடைக்கும்படி. இன்றைய இறைமொழி. திங்கள், 22 செப்டம்பர் ’25.

Monday, September 22, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி நம்பிக்கை இறைவார்த்தை இறைஒளி உண்மை நம்பிக்கை பெறுதல் விளக்கின் நோக்கம் ஜெப மனநிலை இறைவேண்டல் மனநிலை உயிரோட்டமுள்ள நம்பிக்கை பாரசீக அரசன் சைரசு எருசலேம் மீட்பு

இன்றைய இறைமொழி
திங்கள், 22 செப்டம்பர் ’25
பொதுக்காலம் 25-ஆம் வாரம், திங்கள்
எஸ்ரா 1:1-6. லூக்கா 8:16-18

 

ஒளி கிடைக்கும்படி

 

நாம் கொண்டிருக்கிற நம்பிக்கையை வெளிப்படையாக அறிக்கையிடவும் அதற்குச் சான்று பகரவும் நம்மை அழைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

 

‘விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை’ என்னும் உருவகத்தோடு தொடங்குகிறது வாசகம். ஒளி என்பது இறைவார்த்தை, உண்மை, நம்பிக்கை ஆகியவற்றைக் குறிக்கிறது. ஒளியை ஏற்றுதல் என்பதை நம்பிக்கையைப் பெற்றுக்கொள்தல் என்று பொருள்கொள்ளலாம்.

 

நம்பிக்கையைப் பெற்றுக்கொண்ட ஒருவர் அதைத் தனக்குத்தானே மூடிவைத்துக்கொள்ள இயலாது. விளக்கு ஏற்றப்படுவதன் நோக்கம் அது மற்றவர்களுக்கு ஒளி தருவதற்குப் பயன்படுவதற்காகவே. பாத்திரத்தால் மூடி வைக்கும்போது விளக்கு அதன் பயனை இழப்பதோடு, விளக்கு அணைந்துவிடுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

 

விளக்கு தனக்கு அருகில் இருக்கும் அனைத்தையும் ஒளிர்விப்பதுபோல, நம்பிக்கையும் நம்மைச் சுற்றியிருக்கிற அனைத்தையும் ஒளிர்விக்கிறது. அப்படி ஒளிர்விக்கப்படும் அனைத்தும் அனைவருடைய கண்களுக்கும் தெளிவாகத் தெரிகின்றன. ஆக, எதுவும் யாருக்கும் மறைபொருளாக இருக்க முடியாது. நம்பிக்கை வழியாக நாம் நம்மைச் சுற்றியிருப்பவற்றைத் தெளிவாகக் காண்பதுபோல, நம்மைச் சுற்றியிருப்பவர்களும் நம்மை எவ்வித மறைபொருளும் இல்லாமல் காண்கிறார்கள்.

 

‘நீங்கள் எத்தகைய மனநிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள்’ என அறிவுறுத்துகிறார் இயேசு. ஏனெனில், நாம் கேட்கும் மனநிலையைப் பொருத்தே இறைவார்த்தை கனி தருகிறது. இயேசுவின் இந்த அறிவுரை விதைகளும் நான்கு நிலங்களும் என்னும் உவமையை நமக்கு நினைவூட்டுகிறது.

 

தொடர்ந்து மேலாண்மையியல் பாடம் ஒன்றையும் மொழிகிறார் இயேசு: ‘உள்ளவருக்குக் கொடுக்கப்படும்.’ இது ‘ஸ்னோபால் இஃபெக்ட்’ (‘பனிஉருண்டை விளைவு’) என அழைக்கப்படுகிறது. அதாவது, மலைமேல் உருவாகிற பனிக்கட்டி உருண்டை கீழே வர வர நிறையப் பனியைத் தன்னோடு சேர்த்துக்கொள்வதோடு, அதன் வேகமும் கூடுகிறது. அறிவு, ஞானம், நம்பிக்கை அனைத்தும் தொடர்ந்து கூடிக்கொண்டே செல்கின்றன. அதே வேளையில், அவை குறையும்போது எல்லாம் வற்றிவிடுகின்றன.

 

நாம் பெற்றிருக்கிற நம்பிக்கையை உயிரோட்டமாக வைக்கவும், இறைவார்த்தைக்குக் கவனமுடன் செவிமடுக்கவும் நம்மை அழைக்கிறது நற்செய்தி வாசகம்.

 

இன்றைய முதல் வாசகத்தில், பாரசீக அரசர் சைரசு இஸ்ரயேல் மக்களை மீண்டும் எருசலேமுக்கு அனுப்பும் நிகழ்வை வாசிக்கிறோம். தம்மை விண்ணகக் கடவுளே இப்பணியைச் செய்யச் சொன்னதாக மொழிகிறார் அவர். ஆண்டவராகிய கடவுள் பாபிலோனியர்களைப் பயன்படுத்தி இஸ்ரயேலரை நாடுகடத்துகிறார். பாரசீகப் பேரரசரைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் நாடு திரும்பச் செய்கிறார். இவ்வாறாக, ‘கொல்வதும் நானே, வாழ்வுதருவதும் நானே’ எனத் தன்னை முன்நிறுத்துகிறார் கடவுள்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: