• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

கவனம் குவித்தல். இன்றைய இறைமொழி. சனி, 23 மே 2026.

Saturday, May 23, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
சனி, 23 மே 2026
பாஸ்கா காலம் ஏழாம் வாரம்
திப 28:16-20, 30-31. யோவா 21:20-25

 

கவனம் குவித்தல்

 

‘ஆண்டவரே, இவருக்கு என்ன ஆகும்? … நான் வரும்வரை இவர் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா!’

 

யோவான் நற்செய்தியின் 21-ஆம் அலகு பிற்சேர்க்கைப் பகுதியாக இருந்தாலும், இப்பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகள் அனைத்தும் நம் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நம்பிக்கை வாழ்வுக்கும் மிகவும் அடிப்படையான பாடங்களைக் கற்பிக்கின்றன. இயேசுவைப் பின்தொடர்ந்து சென்ற பேதுருவின் பார்வை இயேசு அன்பு செய்த சீடர்மேல் படுகிறது. ‘இவருக்கு என்ன ஆகும்?’ எனக் கேட்கிறார். பேதுருவின் கவனச் சிதறலை இயேசு கடிந்துகொள்கிறார். மற்றவர்களுக்கு என்ன ஆகும் என்பது நம் வாழ்வின் கவனச் சிதறலாகவும் இருக்கிறது. மற்றவர்கள் நம் சொற்களையும் செயல்களையும் ஆமோதிக்க வேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மற்றவர்கள் நம்மேல் நல்ல எண்ணம் கொண்டிருக்க வேண்டும் என்றும் நினைக்கும் நாம் மற்றவர்களைத் திருப்திப் படுத்துவதிலேயே நம் நேரத்தைக் கழிக்கிறோம். மேலும், மற்றவர்களுடைய வாழ்க்கை நம் உள்ளத்தில் பொறாமை, கோபம் போன்ற உணர்வுகளைத் தூண்டுகின்றன.

 

பவுல் உரோமையை அடையும் நிகழ்வை இன்றைய முதல் வாசகத்தில் காண்கிறோம். இந்நிகழ்வு பவுல் கொண்டிருந்த மனத்திடத்தையும் கூர்நோக்கையும் நமக்கு எடுத்துரைக்கிறது. இலக்குத் தெளிவு, துணிவான பயணம் ஆகியவை சீடத்துவத்துக்கு அவசியமானவை.

 

கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி எண் 1808, நான்கு முதன்மையான விழுமியங்களில் ஒன்றான திடம் என்றால் என்ன என்பதை நமக்கு விளக்குகிறது: ‘துன்பங்கள் நடுவே நாம் கொண்டிருக்க வேண்டிய அசையாத்தன்மையே திடம். இதன் வழியாகவே நாம் வாழ்வில் வரும் கவனச் சிதறல்களைக் களைகிறோம்.’

 

வாழ்க்கை என்பது ஒரு தேர்வு என நாம் புரிந்துகொள்வோம். ஒரே அறையில் உள்ள அனைவருக்கும் தரப்பட்டுள்ள வினாக்கள் வௌ;வேறானவை. நாம் மற்றவர்களைப் பார்த்து எழுதத் தொடங்கினால் தோல்வி அடைவோம்.

 

நம் அன்றாட வாழ்வில் நாம் நேற்றைவிட இன்று உடல் நலத்தில், உள்ள நலத்தில், பொருளாதாரத்தில், மனநிறைவில் வளர்ந்திருக்கிறோமா என்று பார்க்க வேண்டுமே தவிர, மற்றவர்களைவிட நான் எப்படி இருக்கிறேன் என்று பார்க்கக் கூடாது. நாம் அனைவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள்.

 

‘விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய். ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கையே உறுதிசெய்யும்!’ (நீமொ 4:23)

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: