• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

தாயும் சகோதரர்களும். இன்றைய இறைமொழி. செவ்வாய், 23 செப்டம்பர் ’25.

Tuesday, September 23, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

புனிதத்துவம் இயேசுவின் தாய் இயேசுவின் சகோதரர்கள் புனித பியோ ஐந்து காய வரங்கள் இயேசுவின் உறவு வட்டம் புதிய உறவு வரையறை உடல்சார் உறவுநிலை ஆன்மிகம்சார் உறவுநிலை இறைஉறவு நிலை இறை-மனித உறவுநிலை

இன்றைய இறைமொழி
செவ்வாய், 23 செப்டம்பர் ’25
பொதுக்காலம் 25-ஆம் வாரம், செவ்வாய்
புனித பியோ, மறைப்பணியாளர் – நினைவு

எஸ்ரா 6:7-8, 12ஆ, 14-20. லூக்கா 8:19-21

 

தாயும் சகோதரர்களும்

 

இயேசுவுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் இடையே நிகழும் உரையாடல் ஒன்றை இங்கே வாசிக்கிறோம். லூக்கா நற்செய்தியில், இயேசுவும் அவருடைய தாயும் சந்திக்கும் நிகழ்வு எருசலேம் ஆலயத்தில் நிகழ்கிறது. அதைத் தொடர்ந்து, அவருடைய பணிவாழ்வில் அவர்கள் இருவரும் சந்தித்த நிகழ்வு இங்கேதான் நடக்கிறது. இயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரைத் தேடி வருகிறார்கள். அவர்கள் வருவதற்கான நோக்கம் பற்றி நற்செய்தியாளர் பதிவுசெய்யவில்லை.

 

இயேசுவுக்கு அருகில் உள்ள கூட்டம் அவருக்கும் அவருடைய உறவினர்களுக்கும் இடையே தடையாக இருக்கிறது. இதைத் தடை என்று பார்ப்பதற்குப் பதிலாக, இயேசுவுடைய உறவு வட்டம் புதிய மக்களால் நிரம்புகிறது. உறவினர்களின் வருகை இயேசுவுக்கு அறிவிக்கப்பட்டவுடன், ‘இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்களே தாயும் சகோதரர்களும்’ என்று புதிய உறவு வட்டத்தை வரையறுக்கிறார் இயேசு. உடல்சார் உறவுநிலையைத் தாண்டி ஆன்மிகம்சார் உறவுநிலையைச் சுட்டிக்காட்டுகிறார் இயேசு.

 

மேலும், இந்த நிகழ்வு வழியாக மரியா இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்பட்டதாலேயே தம் தாயாக உயர்ந்தார் என அழுத்தம் தருகிறார் இயேசு.

 

இறைவார்த்தைக்குப் பலன் தருதல், இறைவார்த்தையை அனைவருக்கும் வெளிப்படுத்துதல் என்னும் இயேசுவின் போதனைகளைத் தொடர்ந்து, இறைவார்த்தையைக் கேட்டுச் செயல்படுத்துவதன் வழியாக இறைஉறவு நிலைக்கு உயர்தல் பற்றிப் பேசுகிறார் இயேசு.

 

முதல் வாசகத்தில், பாபிலோனியாவிலிருந்து நாடு திரும்புகிற மக்கள் தங்களுக்கென ஆலயத்தைக் கட்டி முடிப்பதை வாசிக்கிறோம். ஆலய அருள்பொழிவு நிகழ்வு அவர்களுக்கு மகிழ்ச்சி தருவதோடு அவர்களுடைய வாழ்க்கைக்குப் புதிய பொருளும் தருகிறது.

 

இன்று நாம் அருள்தந்தை புனித பியோவை நினைவுகூர்கிறோம். கப்புச்சின் சபையைச் சார்ந்த இத்தாலிய அருள்பணியாளர் இவர். ஆழமான அன்பும் ஆன்மிகத்தில் மேன்மையும் பெற்றிருந்த இவர் ஐந்து காய வரங்களைப் பெற்றிருந்தார். தன் வாழ்வில் தான் அனுபவித்த அனைத்துத் துன்பங்கள் நடுவிலும் பொறுமை காத்தார். ஒப்புரவு அருளடையாளம் நிறைவேற்றுவதில் நீண்ட காலத்தைச் செலவிட்டார். புனிதத்துவம் என்பது அன்றாட வாழ்வின் சுமைகளைச் சுமப்பது எனக் கற்றுக்கொடுக்கிறார் இவர்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: