• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இம்மானுவேலே, வாரும்! இன்றைய இறைமொழி. செவ்வாய், 23 டிசம்பர் ’25.

Tuesday, December 23, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

நம்பிக்கை எதிர்நோக்கு இறைவாக்கினர் எலியா திருமுழுக்கு யோவான் இறைவாக்கினர் மலாக்கி மெசியா இயேசு கடவுள் நம்மோடு கிறிஸ்து பிறப்பு நவநாள் இம்மானுவேல் புனித சக்கரியா திருமுழுக்கு யோவான் பிறப்பு

இன்றைய இறைமொழி
செவ்வாய், 23 டிசம்பர் ’25
கிறிஸ்து பிறப்பு நவநாள் – 7
மலாக்கி 3:1-4, 4:5-6. லூக்கா 1:57-66

 

இம்மானுவேலே, வாரும்!

 

கிறிஸ்து பிறப்பு நவநாளின் ஏழாம் நாள் ‘ஓ அழைப்பு,’ ‘இம்மானுவேலே, வாரும்!’. பழைய ஏற்பாட்டில் இறைவாக்கினர் எசாயா வழியாக அரசர் ஆகாசுக்கு ‘இம்மானுவேல்’ அடையாளம் வழங்குகிறார் (காண். எசா 7:14). புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பிறப்பை யோசேப்புக்கு வானதூதர் முன்னுரைக்கிற நிகழ்வில் இந்த அடையாளம் நிறைவேறுவதாகப் பதிவு செய்கிறார் மத்தேயு (காண். 1:23).

 

எபிரேய விவிலியத்தின் இறுதி நூலாகிய மலாக்கி இறைவாக்கினர் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகம் மெசியா பற்றியும் மெசியாவுக்கான முன்னோடி பற்றியும் நமக்கு எடுத்துச் சொல்கிறது. ‘நீங்கள் தேடுகிற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார்’ என முன்னுரைக்கிறார் மலாக்கி. குழந்தை இயேசுவை அவருடைய பெற்றோர் ஆலயத்தில் அர்ப்பணமாக்கும் நிகழ்வில் இந்த இறைவாக்கு நிறைவேறுகிறது (காண். லூக் 2:22). மெசியாவின் முன்னோடியாக வருகிற எலியா திருமுழுக்கு யோவானே என்பது வானதூதர் சக்கரியாவுக்க உரைத்த சொற்களில் உறுதியாகின்றது: ‘எலியாவின் உளப்பாங்கையும் வல்லமையையும் உடையவராய் அவருக்கு முன் செல்வார்’ (காண். லூக் 1:17).

 

நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவானுக்குப் பெயரிடும் நிகழ்வை வாசிக்கிறோம். ‘இக்குழந்தையின் பெயர் யோவான்’ என சக்கரியா எழுதியவுடன் அவருடைய வாய் திறக்கிறது. சுற்றத்தார் அனைவரும், ‘இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?’ எனச் சொல்லிக்கொள்கிறார்கள்.

 

இவ்விரு வாசகங்களின் பின்புலத்தில், இன்றைய ‘இம்மானுவேல்’ அழைப்பு நமக்குச் சொல்வது என்ன?

 

(அ) ஆண்டவராகிய கடவுள் உரைக்கும் சொற்கள் அனைத்தும் நிறைவுபெறுகின்றன. அனைத்தையும் அதனதன் காலத்தில் நிறைவுக்குக் கொண்டுவருபவராக இருக்கிறார் கடவுள்.

 

(ஆ) திருமுழுக்கு யோவானின் பிறப்பு சுற்றத்தாருக்குத் தருகிற மகிழ்ச்சி, மெசியாவுடைய வருகை தருகிற மகிழ்ச்சிக்கான முன்னோட்டமாக இருக்கிறது.

 

(இ) ‘இம்மானுவேல்’ என்றால் ‘கடவுள் நம்மோடு’ என்பது பொருள். இச்செய்தி நமக்கு மகிழ்ச்சியும் எதிர்நோக்கும் நம்பிக்கையும் தருகிறது. சோர்வுற்ற நேரங்களில் நமக்கு ஆறுதல் தருகிறது. ‘கடவுள் நம்மோடு இல்லை’ என்று சில நேரங்களில் விரக்தி அடைகிறோம். ‘கடவுள் நம்மோடு இருக்க மாட்டார்’ என அவரை நம் வாழ்விலிருந்து எடுத்துவிடுகிறோம். ‘கடவுள் நம்மோடு இருக்கத் தேவையில்லை’ என்று தள்ளி ஓடுகிறோம். அல்லது ‘கடவுள் எங்களோடு மட்டும்தான்’ எனச் சொல்லி அடிப்படைவாதத்தோடு செயல்படுகிறோம். பிறழ்வுகள் விடுத்து ‘கடவுள் நம்மோடு’ என வாழ்தல் நலம்.

 

‘ஓ இம்மானுவேல் (எசா 7:14. 8:8. லூக் 1:31-33), எங்கள் அரசரே, எங்களுக்குத் திருச்சட்டம் அருள்பவரே (தொநூ 49:10. எசே 21:32), மக்களினங்களின் எதிர்நோக்கே, அவர்களின் மீட்பரே (எசா 33:22). ஆண்டவராகிய நம் கடவுளே, வாரும், எங்களை மீட்டருளும்!’

 

இதுவே இன்றைய இறைவேண்டல்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: