• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

அவர்களை அனுப்பினார். இன்றைய இறைமொழி. புதன், 24 செப்டம்பர் ’25.

Wednesday, September 24, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

பன்னிருவர்-பணி பங்காளர்கள் பேய்கள் மேல் அதிகாரம் பிணிகள்மேல் அதிகாரம் அழைக்கப்பட்டவர்-அனுப்பப்படுபவர் பராமரிக்கும் கடவுள் கடவுள் சார்புநிலை நிராகரிப்பை ஏற்றுக்கொள்தல் இயேசுவின் நலப்பணி இயேசுவின் நற்செய்தி அறிவிப்பு பேய்கள் ஓட்டுதல் சிறுநுகர் வாழ்வு-தற்சார்பு மையம் கடவுளின் கருணை ஆட்சி சான்றுவாழ்வு

இன்றைய இறைமொழி
புதன், 24 செப்டம்பர் ’25
பொதுக்காலம் 25-ஆம் வாரம், புதன்
எஸ்ரா 9:5-9. லூக்கா 9:1-6

 

அவர்களை அனுப்பினார்

 

இன்றைய நற்செய்தி வாசகம் ‘அதிகாரம்,’ ‘அறிவுரை,’ ‘அறிக்கை’ என்னும் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது. தம் பன்னிருவரையும் தம்மிடம் அழைக்கிற இயேசு பேய்கள் மற்றும் பிணிகள்மேல் தமக்கு உள்ள அதிகாரத்தை அவர்களுக்கும் அளிக்கிறார். இவ்வாறாக, அவர்களைத் தம் பணியின் பங்காளர்களாக மாற்றுகிறார். நற்செய்தி அறிவிக்குமாறு அவர்களை அனுப்புகிறார். அழைக்கப்படுபவர் அனைவருமே அனுப்பப்படுவர். அழைத்தலும் அனுப்பப்படுதலும் பணிவாழ்வு என்னும் நாணயத்தின் இரு பக்கங்கள் என உணர்த்துகிறார் இயேசு.

 

இரண்டாவதாக, அறிவுரைப் பகுதி. பணம் மறுப்பு, ஒரே அங்கி, வரவேற்கப்படுகிற இடத்தில் குடியிருப்பு, நிராகரிப்பை ஏற்றுக்கொள்தல் என்று அறிவுரை வழங்குகிறார் இயேசு. அனுப்பப்படுகிறவர் தன் வசதி வாய்ப்புகளைப் பற்றிய கவலையை விடுக்க வேண்டும், கடவுள் நம்மைப் பராமரிப்பவர் என்பதை உணர வேண்டும், மற்றவர்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொள்வதன் வழியாக அவர்கள்மேல் சார்புநிலையை உருவாக்கிக் கொண்டாட வேண்டும், தங்களைச் சுற்றியிருக்கும் சூழல்கள் தங்கள்மேல் தாக்கத்தை ஏற்படுத்தாதவாறு தற்காத்துக்கொள்ள வேண்டும், எந்த நேரத்தில் வெளியேறுவது என்பதை அறிந்தவர்களாக இருத்தல் வேண்டும் என்பது இயேசுவுடைய அறிவுரையின் உட்கூறுகள் ஆகும்.

 

மூன்றாவதாக, அனுப்பப்பட்ட பன்னிருவரும் ஊர் ஊராகச் சென்று நற்செய்தியை அறிவித்து உடல்நலமற்றவர்களுக்கு நலம் தருகிறார்கள். அதாவது, இயேசு தந்த அதிகாரமும், அறிவுரையும் உடனடியாகச் செயல்படுத்தப்படுகிறது.

 

திருமுழுக்கின் வழியாக நாமும் இயேசுவின் சீடர்கள் வட்டத்துக்குள் நுழைகிறோம். இயேசுவின் நற்செய்தி அறிவிப்பு, பேய்கள் ஓட்டுதல், நலம் தருதல் என்னும் பணிகளில் நமக்கும் பங்கு உண்டு. தீய ஆவிகள்மேலும் நோய்கள்மேலும் நமக்கும் அதிகாரம் உண்டு. இவற்றை நாம் பல நேரங்களில் மறந்துவிடுகிறோம். பயன்படுத்தப்படாத எதுவும் அழிந்துபோகும் என்பது பரிணாமக்கொள்கையின் கூறு. நாம் பெற்றிருக்கிற கொடைகள் பற்றிய அக்கறை நமக்கு வேண்டும்.

 

இரண்டாவதாக, சிறுநுகர் வாழ்வு மற்றும் கடவுளின் பராமரிப்பின்மேல் நம்பிக்கை. இன்று பல இடங்களில் சிறுநுகர் வாழ்வு வாழ வேண்டுமென்று அறிவுரை வழங்கப்படுகிறது. உலகம் முன்மொழியும் சிறுநுகர் வாழ்வு பொருளாதாரம் சார்ந்ததாக, தற்சார்பை மையப்படுத்தி இருக்கிறது. ஆனால், இயேசு முன்மொழியும் வாழ்வு கடவுளையும் ஒருவர் மற்றவரையும் நாம் சார்ந்த சிறுநுகர் வாழ்வாக இருக்கிறது.

 

மூன்றாவதாக, நற்செய்தி அறிவிப்பு என்பது சான்றுவாழ்வு என மலர வேண்டும்.

 

முதல் வாசகத்தில், புதிய ஆலயத்தில் மக்கள் நடுவே நிற்கிற எஸ்ரா அவர்களுக்காக இறைவேண்டல் செய்கிறார். கடவுள் தங்களை அடிமைத்தனத்திற்குக் கையளித்தும், அடிமைகளாகவே ஆக்கிவிடவில்லை எனக் கடவுளின் கருணையைப் புகழ்கிறார். வாழ்வின் நிகழ்வுகளைப் பின்நோக்கிப் பார்க்கும்போது கடவுளின் கருணையே நம்மை ஆண்டுநடத்தி வந்ததை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: