• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

விண்ணினின்று விடியல். இன்றைய இறைமொழி. புதன், 24 டிசம்பர் ’25.

Wednesday, December 24, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

கடவுள் உடனிருப்பு கடவுளின் இரக்கம் கிறிஸ்து பிறப்பு நவநாள் புனித சக்கரியா கடவுளின் இறைவாக்கினர் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா விண்ணின் விடியல் கடவுளின் பரிவுள்ளம் கடவுள் இல்லம்

இன்றைய இறைமொழி
புதன், 24 டிசம்பர் ’25
கிறிஸ்து பிறப்பு நவநாள் – 8
2 சாமுவேல் 7:1-5, 8-12, 16. லூக்கா 1:67-79

 

விண்ணினின்று விடியல்

 

வானினின்று ஆதவன் எழும் நேரம்,

மணவறையினின்று புறப்படும் மணமகன்போல

தந்தையின் நெஞ்சினின்று மகன் மானிடராய்ப் புறப்படக் காண்பீர்!

 

‘என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக்கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். நீ சென்ற இடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன் … ஆண்டவர்தாமே உன் வீட்டைக் கட்டுவார். உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்.’

 

‘குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய். ஏனெனில், பாவமன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியை செம்மைப்படுத்த அவர்முன்னே செல்வாய். இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும், நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது.’

 

பிரியமானவர்களே, கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவுக்கு முந்தைய நாளில் நிற்கிறோம். நம் இல்லங்களும் உள்ளங்களும் கிறிஸ்துவை வரவேற்கத் தயாராக இருக்கின்றன.

 

காலத்தைக் கடந்த கடவுள் நம் காலத்துக்குள் நுழைந்து தமக்கென கூடாரம் ஒன்றை நம் நடுவே அமைத்துக்கொள்கிறார். கடவுளுக்கென கோவில் ஒன்றைத் தாவீது கட்ட விரும்பியபோது, தாவீதுக்கு கடவுள் இல்லம் கட்டுவதாக வாக்களிக்கிறார். இருளிலும் இறப்பின் பிடியிலும் வாழ்வாருக்கு ஒளி கொடுக்க விண்ணிலிருந்து விடியல் ஒன்று இறங்கி வருவதாகப் பாடுகிறார் சக்கரியா.

 

கடவுளுடைய வாக்குப் பிறழாமையில் நம்பிக்கை கொள்ளும் நாம், அவருடைய உடனிருப்பால் நம் வாழ்க்கையை நெறிப்படுத்துகிறோம். கடவுள் நமக்கு விடியலாக வருகிறார் எனில், நாம் ஒருவர் மற்றவரின் விடியலாக மாறுவோம். ஆமென்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: