இன்றைய இறைமொழி
வெள்ளி, 25 ஏப்ரல் ’25
பாஸ்கா எண்கிழமை – வெள்ளி
திருத்தூதர் பணிகள் 4:1-12. யோவான் 21:1-14
இடுப்பில் ஆடை
இயேசுவின் இறப்பு ஒரு தோல்வி என நினைத்த திருத்தூதர்கள், தங்களின் தொழிலைப் பார்க்கப் புறப்பட்டுவிடுகின்றனர். சீமோன் பேதுரு, ‘நான் மீன் பிடிக்கப் போகிறேன்!’ என்று சொல்ல, மற்றவர்களும், ‘நாங்களும் உம்மோடு வருகிறோம்’ என்று புறப்படுகின்றனர்.
ஏற்கனவே மீன்பிடித்துக்கொண்டிருந்த சீமோன் பேதுருவையும் மற்ற சீடர்களையும், ‘உங்களை மனிதரைப் பிடிப்பவராக்குவேன்’ என்று சொல்லி அழைக்கின்றார். மனிதர்களைப் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் இன்று மீன்பிடிக்கப் புறப்படுகின்றனர்.
ஏன் பேதுரு அப்படி புறப்பட்டார்? மனிதர்களைக் பிடிப்பது அவருக்குப் பிடிக்கவில்லையா?
அ. விரக்தி. ‘இயேசுவை மெசியா என நினைத்தோம். உரோமையின் பிடியிலிருந்து மீட்பார் என நினைத்தோம். ஆனால், இப்படி தோல்வியாய் இறந்து போனாரே’ என்று சிந்தித்த பேதுரு விரக்தி அல்லது சோர்வு அடைந்திருக்கலாம்.
ஆ. கோபம். இயேசுவின் இறப்புக்குக் காரணமான அவருடைய எதிரிகள் மேல் உள்ள கோபம். இந்தக் கோபத்தால் மனிதர்களையே பிடிக்காமல் போயிருக்கலாம் இவருக்கு. ‘நீங்கள் எல்லாம் மனுஷங்களாடா? அவர் உங்களுக்கு என்ன தீங்கு செய்தார்?’ என்று தனக்குள்ளே கேட்டிருப்பார்.
இ. குற்ற உணர்வு. இயேசுவை தான் மூன்று முறை மறுதலித்ததால், ‘ச்சே! நான் இப்படி செய்துவிட்டேனே!’ என்ற குற்றவுணர்வு இவருடைய முகத்தில் அறைய, அதிலிருந்து தப்பிப்பதற்காக, அல்லது தன் மனத்தை மாற்றிக் கொள்வதற்காக, அல்லது, ‘இனி நான் சீடர் எனப்பட தகுதியற்றவன்’ என்ற தன்னிரக்கத்தில் அவர் மறுபடியும் மீன்பிடிக்கப் போயிருக்கலாம்.
இயேசு தன்னுடைய உயிர்ப்புக்குப் பின் மூன்றாம் முறை தன் சீடர்களுக்குத் தோன்றும் நிகழ்வை வாசிக்கின்றோம்.
நிகழ்வின் தொடக்கத்தில், ‘நான் மீன் பிடிக்கப் போகிறேன்’ என்கிறார் சீமோன் பேதுரு. தான் மனிதர்களைப் பிடிக்க வேண்டும் என்பதை மறந்ததால் அப்படிச் செய்தாரா? இல்லை என்று நினைக்கிறேன். தான் தன்னுடைய தலைவரை மறுதலித்தது பேதுருவின் ஆன்மாவில் விழுந்த அம்மைத் தழும்பாய் குற்றவுணர்வாக உருத்திக்கொண்டே இருந்திருக்கலாம். ஆக, தான் மனிதரைப் பிடிக்கத் தகுதியற்றவன் என்ற நிலையிலோ, அல்லது தன்னுடைய சோகம் அல்லது தன்மேல் உள்ள கோபத்தை வடிகாலாக்க மீன்பிடிக்கச் சென்றிருக்கலாம்.
மீன் ஒன்றும் சிக்கவில்லை. கரையிலிருந்து ஒரு குரல்: படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள். வலை நிறைய மீன்கள் அகப்பட்டவுடன், யோவான் பேதுருவிடம், ‘அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்’ என அடையாளம் காட்டுகின்றார்.
இதற்குப் பின் பேதுரு செய்யும் செயல்களை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். மூன்று செயல்களைச் செய்கின்றார் பேதுரு.
அ. தம் ஆடையைக் களைந்திருந்த பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதிக்கின்றார்.
ஒன்று, பேதுரு நிர்வாணமாக இருந்திருக்க வேண்டும். அல்லது, கடலுக்குச் செல்லும் மீனவர்கள் அணியும் மிகச் சிறிய அல்லது குறைவான ஆடையை அணிந்திருக்க வேண்டும்.
ஆ. படகு கரைக்குச் செல்லுமுன் தண்ணீரில் நீந்தி இயேசுவை நோக்கிச் செல்கின்றார்.
இ. ‘மீன்கள் சிலவற்றைக் கொண்டு வாருங்கள்’ என்று இயேசு சொன்னவுடன், படகில் ஏறி, வலையிலிருந்து மீன்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு வருகின்றார்.
பேதுருவின் குற்றவுணர்வு இங்கே படிப்படியாக மறைகிறது. எப்படி?
முதலில், நாம் தவறு செய்யும்போது, நம்முடைய பார்வையில் மிகச் சிறியவர்களாக மாறிவிடுகிறோம். அல்லது நாம் ஆடையின்றி நிர்வாணமாக இருப்பது போல கூனிக் குறுகுகின்றோம். ஏனெனில், பாவம் செய்தவுடன் நம் முதற்பெற்றோர் பெற்ற முதல் உணர்வே நிர்வாண உணர்வு அல்லது வெட்க உணர்வுதான். இயேசுவின் உடனிருப்பு, பேதுருவை உடுத்துகிறது. பேதுரு ஆடையை அணிந்துகொள்கின்றார்.
இரண்டாவதாக, இயேசுவை நோக்கி நீந்திச் செல்கின்றார். இவருக்கும் தண்ணீருக்குமான இறுதி நெருக்கம் இது. ‘மீன்பிடிக்கப் போக விரும்பிய’ பேதுருவை இறுதியாக, கடல்நீரில் நீந்த வைக்கின்றார் இயேசு. இப்போது நீந்திய இவர் இனி நீந்தப் போவதில்லை. இவர் இனி மனிதர்களைப் பிடிப்பாரே அன்றி, மீன்களைப் பிடிக்க மாட்டார். ஆக, தானே தன்னுடைய பழைய தொழிலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும்விதமாக இறுதியாக தண்ணீர் தன் உடலைத் தொட அனுமதிக்கின்றார். இதைக் கொஞ்சம் உருவகமாகச் சொன்னால், தன்னுடைய தவற்றை எண்ணி தான் வடித்த கண்ணீர்த்துளிகளை இத்தண்ணீர் சுட்டிக்காட்டுவதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
மூன்றாவதாக, படகைக் கரைக்கு இழுத்து மீன்களை இயேசுவிடம் கொண்டுவருகின்றார். படகு என்பது திருச்சபையையும், கரை என்பது இறையாட்சியின் நிறைவேறுதலையும் குறிக்கிறது. ஆக, திருச்சபை என்னும் படகை இறையாட்சி என்னும் கரையில் சேர்த்து, மீன்கள் என்னும் நம்பிக்கையாளர்களை இயேசுவிடம் கொண்டுவருவதே பேதுருவின் வேலை.
இந்த மூன்று படிகளில் பேதுருவின் குற்றவுணர்வு களையப்பட்டு, பொறுப்புணர்வு ஊட்டப்படுகிறது.
இந்த நற்செய்திப் பகுதி நமக்குச் சொல்வது என்ன?
நாமும் பல நேரங்களில் தவறு செய்கின்றோம். ஆனால், இயேசுவின் உடனிருப்பு நம் தவற்றை நமக்கு உணர்த்தி, நம் நிர்வாண உணர்வை அகற்றி நம்மை உடுத்துகிறது. இரண்டாவதாக, தண்ணீரில் நீந்துதல் நம் திருமுழுக்கையும், அல்லது ஒப்புரவு அருளடையாளத்தில் நாம் சிந்துகின்ற கண்ணீரையும் குறிக்கிறது. திருமுழுக்கின் தண்ணீர் மற்றும் ஒப்புரவின் கண்ணீர் வழியே நாம் தூய்மை அடைகிறோம். மூன்றாவதாக, அப்பமும் மீனும் நற்கருணையைக் குறிக்கிறது. இந்த நற்கருணை வழியாக நாம் இயேசுவோடு பந்தி அமர்கிறோம். நம் உறவு புதுப்பிக்கப்படுகிறது.
தொடர்ந்து, இயேசு, இங்கே, மனித ஏமாற்றத்தையும், பசியையும் அறிந்தவராக இருக்கின்றார். ‘பிள்ளைகளே, மீன் ஒன்றும் கிடைக்கவில்லையா!’ என்றும் ‘உணவருந்த வாருங்கள்’ என்றும் வாஞ்சையோடு பேசுகின்றார். சீடர்களைக் கடிந்துகொள்ளவில்லை. நம் உடல் ஏற்றதால் அவருக்கு மனித வாழ்வின் ஏமாற்றமும் பசியும் நன்றாகத் தெரியும்.
ஆக, அவரைக் கடவுளாக அந்நியப்படுத்துவதைவிட, மனிதராக அருகில் வைத்துக்கொள்தல் நலம்.
நற்செயல்: இன்று என்னை நிர்வாண உணர்வுகொள்ளச் செய்யும் என்னுடைய குறை எது? என் நிர்வாணத்தைக் களைந்து ஆடையை இடுப்பில் கட்டிக்கொள்ள நான் தயாரா?
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: