இன்றைய இறைமொழி
வியாழன், 25 செப்டம்பர் ’25
பொதுக்காலம் 25-ஆம் வாரம், வியாழன்
ஆகாய் 1:1-8. லூக்கா 9:7-9
ஏரோது குழப்பமுற்றார்!
‘நிகழ்ந்தவற்றை எல்லாம் குறுநில மன்னன் கேள்வியுற்று மனம் குழம்பினான்’ என்னும் வாக்கியத்தோடு தொடங்குகிறது இன்றைய நற்செய்தி வாசகம். புதிய ஏற்பாட்டில் நாம் ஐந்து ஏரோதுக்களைக் காண்கிறோம். (அ) பெரிய ஏரோது – குழந்தை இயேசுவைக் கொல்லத் தேடியவர் இவர். (ஆ) ஏரோது அர்க்கெலா – திருக்குடும்பம் எகிப்திலிருந்து திரும்பியபோது யூதேயாவை ஆட்சி செய்தவர். (இ) ஏரோது அந்திபா – திருமுழுக்கு யோவானைக் கொலை செய்தவர். (ஈ) ஏரோது பிலிப்பு – இவருடைய மனைவியைத்தான் ஏரோது அந்திபா தன் மனைவியாகக் கொண்டார். (உ) ஏரோது அக்ரிப்பா – பெரிய ஏரோதுவின் பேரனான இவரையே பவுல் சந்திக்கிறார்.
இன்றைய நற்செய்தியில் நாம் காண்பவர் ஏரோது அந்திபா ஆவார்.
இயேசுவைப் பற்றி மக்கள் மூன்று புரிதல்களை ஏரோதுவிடம் சொல்கின்றனர்: ‘இறந்த யோவான் எழுப்பப்பட்டார்’ – அதாவது, இறக்கின்ற நீதிமானுடைய ஆவி இன்னொருவரின் மேல் தங்கும் என்பது யூதர்களின் நம்பிக்கை. அப்படித்தான் எலியாவிடம் தங்கியிருந்த ஆவி எலிசாவிடம் தங்குகிறது. ‘எலியா மீண்டும் வருவார்’ என்ற நம்பிக்கையில், இயேசுவை ‘எலியா’ என்கின்றனர் இன்னும் சிலர். மேலும் சிலர், ‘முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர்’ எனப் பொத்தாம் பொதுவாகச் சொல்கின்றனர்.
‘யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே!’ என்னும் வார்த்தைகள் ஒரே நேரத்தில் ஏரோது தன் உள்ளத்தில் தான் செய்த தவற்றை ஏற்றுக்கொண்டு அறிக்கையிடுவதாகவும், இவ்வார்த்தைகளைக் கொண்டு இயேசுவை எச்சரிப்பதாகவும் அமைந்துள்ளன. ஏனெனில், இந்த ஏரோதுவே இன்னும் சில நாள்களில் இயேசுவைக் கொல்லத் தேடுவார். இயேசு இந்த ஏரோதுவை அந்நேரத்தில் ‘குள்ளநரி’ என அழைக்கின்றார் (காண். லூக் 13:32).
‘இவர் யாரோ?’ என ஏரோது கேட்கும் கேள்வியை, சற்றுமுன் சீடர்களும், ‘இவர் காற்றுக்கும் நீருக்கும் கட்டளையிடுகின்றார். அவை கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?’ என்று கேட்கின்றனர் (காண். லூக் 8:25). ஆக, இயேசுவின் வல்ல செயலைக் காணும் ஒருவர் எழுப்பும் பதிலிறுப்பாகவும், இயேசுவின்மேல் கொள்ளும் நம்பிக்கையின் தொடக்கப் புள்ளியாகவும் இருக்கிறது இக்கேள்வி.
இறுதியில், இயேசுவைக் காண வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கிறார் ஏரோது. ‘தொலைத்த ஒன்றைத் தேடுவதற்கான’ கிரேக்கச் சொல்லே (‘ஸ்ஷேடேயோ’) இங்கு பயன்படுத்தப்படுகின்றது. ஏரோது தொலைத்த பொருள் பிலாத்துவிடமிருந்து அனுப்பப்படுகின்றது. ஆனால், அந்தப் பொருளைத் தன்னகத்தே வைத்துக்கொண்டால் பிலாத்துவின் நட்பு பாதிக்கப்படும் என்பதால் அதைப் பிலாத்துவிடமே அனுப்புகிறார் ஏரோது. இறுதியில், இருவரும் இணைந்து மீண்டும் தொலைத்துவிடுகின்றனர்.
இயேசுவைப் பற்றிக் கேள்விப்படுகிற ஏரோது, ‘யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ?’ எனக் குழப்பமுற்று அவரைக் காண வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கிறார்.
யோவானின் தலை வெட்டப்படும் நிகழ்வு இயேசுவுக்காகக் காத்திருக்கிற மரண தண்டனையையும் இங்கே வாசகருக்கு நினைவுபடுத்துகிறது.
கேள்விப்படுதல், குழப்பமுறுதல், வாய்ப்பு தேடுதல் என்று மூன்று செயல்கள் இங்கே குறிப்பிடப்படுவதைக் காண்கிறோம்.
இயேசுவின் போதனைகளும் வல்ல செயல்களும் மக்களுடைய பேசு பொருளாக மாறுகின்றன. அவை ஆளுநரின் காதுகளை எட்டுகின்றன. இயேசு சாதாரண மக்கள் மற்றும் ஆட்சியாளர்களின் பேசுபொருளாக மாறுகிறார். இயேசுவைப் பற்றி மக்கள் வேறு வேறு கண்ணோட்டங்களைக் கொண்டிருக்கிறார்கள். அவர் மெசியாவாகவோ அல்லது இறைவாக்கினராகவோ இருக்கலாம் என நினைக்கிறார்கள்.
ஏரோது தேடிய வாய்ப்பு அவருக்குக் கிடைக்கிறது. இயேசுவைக் காண்கிறார் அவர். தான் திருமுழுக்கு யோவானுக்குச் செய்தது போலவே இயேசுவுக்கும் செய்கிறார். அவரை இறப்புக்குக் கையளிக்கிறார்.
முதல் வாசகத்தில், தமக்கு ஆலயம் கட்டுமாறு ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் ஆகாய் வழியாகச் செய்தி அனுப்புகிறார். முந்தைய மாட்சியைவிட பிந்தைய மாட்சி மேன்மையானதாக இருக்கும் என்கிறார் ஆண்டவர்.
இறைவார்த்தையைக் கேட்கும்போது நாம் குழப்பம் அடைகிறோம்? குழப்பம் சில நேரங்களில் நம்மை மனமாற்றத்திற்கு இட்டுச் செல்கிறது. சில நேரங்களில் நம் உள்ளத்தைக் கடினமாக்குகிறது.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: