
இன்றைய இறைமொழி
வியாழன், 25 டிசம்பர் 2025
நள்ளிரவுத் திருப்பலி – கிறிஸ்து பிறப்பு பெருவிழா
எசாயா 62:1-5. திருத்தூதர் பணிகள் 13:16-17, 22-25. மத்தேயு 1:1-25
சிறிய வயதில் பள்ளிப் பருவத்தில் படித்த கதை நினைவுக்கு வருகிறது. கதையின் பெயர் ‘ராஜா வந்திருக்கிறார்!’ கதையின் ஆசிரியர் கு. அழகிரிசாமி. தீபாவளிக்கு முந்தைய நாள். விடுமுறை விடப்போகிறார்கள் என்ற மகிழ்ச்சியில் குழந்தைகள் பள்ளியில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். ‘உனக்கும் எனக்கும் ஜோடி!’ என்ற விளையாட்டில் சிறுமி மங்கம்மாள் சிறுவன் ராமசாமியைத் தோற்கடித்துவிட்டாள். குழந்தைகள் வீட்டுக்குச் சென்ற சில நிமிடங்களில் மழை பெய்யத் தொடங்கியது. இரவு உணவுக்குப் பின் கைகள் கழுவ வெளியே வந்த குழந்தைகள் சற்று தூரத்தில் மரத்தடியில் சிறுவன் ஒருவன் அழுதுகொண்டு நிற்பதைப் பார்த்து அவனை வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். அந்த அநாதைச் சிறுவனைக் கண்ட மற்ற குழந்தைகளின் தாய் தாயம்மாள், ‘தம்பி, உன் பேரு என்ன? எங்கிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்?’ என்றாள். ‘கழுகுமலையில் உள்ள என் அத்தை வீட்டுக்குப் போறேன்’ என்று சொன்னவன், கோவில்பட்டியிலிருந்து நடந்து வந்தேன் என்று முடித்தான். மழையிலும் இருளிலும் பையனை அனுப்ப வேண்டாம் என நினைத்த தாயம்மாள் வீட்டுக்குள் அவனை அழைத்து அவனுக்கு உணவு தந்து உறங்கச் செய்கிறாள். மறுநாள் தீபாவளி. தன் பிள்ளைகள் மூவரோடு சேர்த்து ராஜாவையும் குளிக்க வைத்து தன் பிள்ளைகளின் பழைய துணி ஒன்றை உடுத்திவிடுகிறாள். பக்கத்து தெருவில் வசித்த ராமசாமியின் அக்காவும் ஜமீன்தாரரின் மகனாகிய அவளுடைய கணவரும் தலைதீபாவளிக்கு வந்திருந்தார்கள். குழந்தைகள் அனைவரும் சேர்ந்து வெடி வெடித்துக்கொண்டிருந்தபோது, அங்கே வருகிற ராமசாமி மங்கம்மாளிடம், ‘எங்க வீட்டுக்கு ராஜா வந்திருக்கிறார்!’ என்கிறான். தன்னைப் போட்டிக்குதான் அழைக்கிறான் என நினைத்த மங்கம்மாள் வேகமாக அவனிடம், ‘எங்க வீட்டுக்கும்தான் ராஜா வந்திருக்கிறார்!’ என்று சொல்லி தன் இல்லம் வந்த புதிய இளவலை அவனுக்குக் காட்டினாள்.
நிற்க.
தாயை இழந்த குழந்தை உணரும் திக்கற்ற நிலை, நோய், துன்பம், வறுமை, வறியவர்களுக்கு இயல்பாகவே இருக்கும் இரக்க உணர்வு, குழந்தைகளுக்கு இடையே நிகழும் போட்டியுணர்வு, விளையாட்டு என பல்வேறு உணர்வுகளையும் எண்ணங்களையும் தூண்டுகிறது ‘ராஜா வந்திருக்கிறார்!’ என்னும் இக்கதை.
கிறிஸ்துமஸ் நிகழ்வில் நமக்குச் சொல்லப்படுவதும் ‘ராஜா வந்திருக்கிறார்!’ என்பதே. இந்த ராஜா எருசலேமிலிருந்த அரண்மனையில் அல்ல, மாறாக, மாட்டுத் தொழுவத்தில் பிறக்கிறார்.
கடந்த சில வாரங்களாகவே நாம் கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடி மகிழ்கிறோம். மதங்கள் கடந்த ஒன்றிப்பு உணர்வுடன் கொண்டாடிய விழா, பள்ளிகளில் கல்லூரிகளில், பணியிடங்களில், நண்பர்களோடு என நாம் கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடி மகிழ்ந்தோம். கொண்டாட்டங்கள் நடுவே நம் உள்ளத்தில் ஒரு கேள்வி எழுகிறது: ‘கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுகிற நாம், கிறிஸ்துவை எப்போது கொண்டாடப் போகிறோம்?’
கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு நாம் மேற்கொண்ட வெளிப்புற தயாரிப்புகள் எதுவும் அன்று கிறிஸ்து பிறப்பதற்காக மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், கடவுள் மனிதர்களைத் தயாரித்தார். தம் ஒரே மகனைத் கருத்தாங்குவதற்காக மரியாவைத் தயாரித்தார். அவரைப் பேணி வளர்ப்பதற்காக யோசேப்பைத் தயாரித்தார். ஆக, மனிதர்களின் தயாரிப்புதான் அவசியமே தவிர, இடங்களின் தயாரிப்பு அல்ல. மனிதர்களைத் தயாரித்த கடவுள் விடுதியைத் தயாரிக்கவில்லை. ஏனெனில், சில விடயங்களை மனிதர்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என விட்டுவிடுகிறார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் உள்ள நகர்தல் நமக்கு ஆச்சர்யம் தருகிறது. அகுஸ்து சீசர் என்னும் ஒருவர் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு ஆணை பிறப்பிக்கிறார். யோசேப்பு-மரியா என்னும் இருவர் பெத்லகேம் நோக்கிப் பயணம் செய்கிறார்கள். மரியாவுக்குப் பேறுகாலம் வந்து குழந்தை பெற்றெடுக்க, இப்போது எண்ணிக்கை மூன்று – யோசேப்பு-மரியா-குழந்தை – என்றாகிறது. வானதூதர் ஒருவர் இடையர்களுக்கு மீட்பரின் பிறப்பை அறிவிக்கிறார்கள். ஒரு குழுமம் உருவாகிறது. இறுதியில், வானதூதர்கள் பேரணி, ‘உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!’ என்று அனைத்து மாந்தர்களையும் உள்ளடக்கி கடவுளைப் போற்றிப் பாடுகின்றது.
மீட்பரின் பிறப்பு அனைவருக்கும் உரித்தானதாக இருக்கிறது. கிறிஸ்து அனைவருக்கும் பொதுவானவர் ஆகிறார்.
கிறிஸ்து பிறந்த இடம் தீவனத்தொட்டி என்று நமக்கு அதிர்ச்சி தருகிற கடவுள், தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக, பிறப்புச் செய்தியை இடையர்களுக்கு அறிவிக்கிறார். திருடர்கள், பொய்யர்கள், அழுக்கானவர்கள் என்று சமூகம் பழிசுமத்தியவர்களுக்கே கிறிஸ்து பிறப்பு அறிவிக்கப்படுகிறது.
‘ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர்’ என்று குழந்தைக்கு மூன்று பெயர்கள் இடப்படுகின்றன: ‘ஆண்டவர்,’ ‘கிறிஸ்து,’ ‘மீட்பர்.’ ‘இன்று’ என்னும் சொல் இறைவன் செயலாற்றுகிற இன்று என்ற இயங்குதளத்தையும், ‘உங்களுக்காக’ என்னும் சொல் கிறிஸ்துவுடைய பிறப்பின் நோக்கத்தையும் எடுத்துரைக்கின்றன.
‘குழந்தை’ என்னும் அடையாளம் இன்றைய முதல் வாசகத்திலும் காணப்படுகிறது.
அசீரியாவின் அடிமைத்தனத்திலும் அச்சுறுத்தலிலும் வாழ்ந்த இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கு உரைக்கிற எசாயா, ‘ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார். ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்’ என்று அறிவிக்கிறார். தொடர்ந்து வருகிற பாடத்தின் சூழலில், இந்தக் குழந்தை ‘எசேக்கியாவை’ அல்லது ‘மெசியா பற்றிய எதிர்நோக்கில்’ வரப்போகிற புதிய அரசரைக் குறிக்கிறது. கிறிஸ்தவ வாசிப்பில், நாம் இத்தலைப்பு இயேசுவில் நிறைவேறுகிறது என நம்புகிறோம். ‘வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்’ என்னும் நான்கு தலைப்புகளும் இயேசுவின் இறைத்தன்மையைக் குறிக்கிறது என்று நாம் பொருள்கொள்கிறோம். யூதப் புரிதலின்படி இத்தலைப்புகள் கடவுளின் குணநலன்களையும் அவர் ஏற்படுத்துகிற அரசரின் பண்புகளையும் குறிக்கின்றன.
மொத்தத்தில், ‘ராஜா வந்திருக்கிறார்!’ என்பதே முதல் வாசகத்தின் செய்தியாகவும் இருக்கிறது.
இரண்டாம் வாசகத்தில், ‘மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது’ என தீத்துவுக்கு எழுதுகிறார் பவுல். கிறிஸ்து நிகழ்வை இறைவெளிப்பாடு என்று இறையியலாக்கம் செய்கிறார் பவுல். கடவுளை நாமாக அறிந்துகொள்ள இயலாது. அவரைக் கண்டுபிடிக்க இயலாது. அவர் தம்மை வெளிப்படுத்தும்போதே நாம் அவரைப் பற்றி அறிந்துகொள்கிறோம்.
கிறிஸ்து பிறப்பு பெருவிழா நமக்குத் தரும் செய்தி என்ன?
இயேசு கிறிஸ்து என்னும் அரசர் எளிய மனித உரு ஏற்று நம் நடுவில் வந்திருக்கிறார். காண இயலாத கடவுள் காணக்கூடிய வடிவில் வந்திருக்கிறார். அவரின் உடனிருப்பு நமக்கு ஆற்றலும் வலிமையும் தருகிறது. காரிருளில் நடந்த வந்த நம் கால்கள் இனி வெளிச்சத்தில் நடக்கின்றன. அவரே நம்மேல் ஒளிர்கிறார்.
அடையாளங்கள் எதுவும் இல்லாதது குழந்தை. வலுவற்றது குழந்தை. மாறுவதற்கான ஆற்றலைப் பெற்றிருப்பது குழந்தை. புதுமையை வளர்ச்சியை மாற்றத்தை ‘குழந்தை’ உருவகப்படுத்துகிறது. நாம் குடிலில் காண்கிற குழந்தை இயேசு நம் அனைவரையும் பிரதிபலிக்கிறார். நம்மில் நாம் இழந்த ‘குழந்தையை’ குடில் குழந்தை நமக்கு நினைவூட்டுகிறது. குழந்தையின் உள்ளமே விண்ணரசின் இல்லம் என்று இயேசு போதிக்கிறார். நம் ஒவ்வொருவரிலும் இருக்கிற குழந்தையைக் கொண்டாடுவோம்.
‘விடுதியில் இடம் இல்லை!’ என்னும் சிக்கல் குழந்தையின் பிறப்பைத் தடுத்து நிறுத்தவில்லை. யோசேப்பு அடுத்த வழியைக் கண்டுபிடிக்கிறார். தொடர் பயணமே கிறிஸ்து பிறப்பு. யோசேப்புவின் வாழ்வில் அவர் எதிர்பார்த்ததுபோல எதுவும் நடக்கவில்லை. நடப்பதை எதிர்கொண்டவராக அவர் தொடர்ந்து பயணிக்கிறார். கிறிஸ்து பிறந்தார், வளர்ந்தார், இறந்தார், உயிர்த்தார், விண்ணகம் சென்றார். நம் வாழ்க்கையை நாம்தான் வாழ வேண்டும். நம் பிறப்பும் எளிய தொடக்கம்தான். நாம் பிறந்தபோது எந்த வானதூதரும் அதை மற்றவர்களுக்கு அறிவிக்கவில்லை. யாரும் கூடி நின்று பாட்டுப் பாடவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நம் வாழ்க்கைப் பயணத்தில் நாம் குழந்தை என்ற ஒருநிலையிலிருந்து ராஜா, ராணி என வளர்கிறோம். தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருத்தலே வாழ்க்கை!
கிறிஸ்து பிறப்பு பெருவிழாவில் நாம் நம் பிறப்பையும் கொண்டாடுவோம். நம்மைப் போல குழந்தை உரு ஏற்ற கடவுள் ராஜாவாக என்றும் நம்மோடு!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Source: Rev. Fr. Yesu Karunanidhi
Share: