• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

நலம் விரும்புதல். இன்றைய இறைமொழி. திங்கள், 26 அக்டோபர் 2026.

Monday, October 26, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
திங்கள், 26 அக்டோபர் 2026
பொதுக்காலம் 30-ஆம் வாரம்
எபே 4:32-5:8. லூக் 13:10-17

 

நலம் விரும்புதல்

 

நமக்குப் பிடிக்காதவர்களுக்கு மட்டுமே நாம் அறநெறி பார்க்கிறோம். வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம் என்பதும் நம் அனுபவமாக இருக்கிறது.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் 18 ஆண்டுகளாக தீய ஆவி பிடித்து கூன் விழுந்த பெண் ஒருவருக்கு நலம் தருகிறார் இயேசு. ஓய்வுநாளில் தொழுகைக்கூடம் ஒன்றில் இயேசு நிகழ்த்திய வல்ல செயலுக்கு தொழுகைக்கூடத் தலைவர் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார். கடவுள் படைத்த அனைத்து நாள்களின் நோக்கம் மற்றவர்களுக்கு, குறிப்பாக, மனிதர்களின் நலம் விரும்புவதே என அவருக்குக் கற்பிக்கிறார் இயேசு.

 

வாசகத்தின் தொடக்கத்தில் கூன் விழுந்து நின்ற பெண், வாசகத்தின் இறுதியில் நலம் பெற்றவராக நிமிர்ந்து நிற்கிறார்.

 

ஓய்வுநாள் சட்டத்தைக் கடைப்பிடிப்பதாகச் சொல்லித் தலைநிமிர்ந்த நின்ற இயேசுவின் எதிரிகள், இறுதியில் வெட்கத்தால் கூன் விழுந்து நிற்கிறார்.

 

இயேசு மூன்று நிலைகளில் அந்தப் பெண்ணின் நலத்தை விரும்புகிறார்:

 

(அ) பொருள்போலக் கருதப்பட்ட ஒதுக்கப்பட்ட ஒருவரை, ‘பெண்’ என்றும் ‘ஆபிரகாமின் மகள்’ என்றும் அழைக்கிறார்.

 

(ஆ) தீய ஆவியின் கட்டுக்குள் இருந்த அந்தப் பெண்ணுக்கு விடுதலை தருகிறார் – அவர் தம் நீண்ட நோயிலிருந்து விடுதலை பெறுகிறார்.

 

(இ) கூன் விழுந்த அவரை நேராக நிமிர்த்துகிறார் – வாழ்வின் பார்வையைச் சுருக்கிக்கொண்டவரை அண்ணாந்து பார்க்கச் செய்கிறார்.

 

தங்களுடைய வீட்டுக் கால்நடைகளுக்கு ஒரு சட்டம், வெளியில் உள்ள மனிதர்களுக்கு வேறு சட்டம் என்று நடந்துகொண்ட இயேசுவின் எதிரிகள் தங்கள் செயல் குறித்து வெட்கப்படுகிறார்கள். இயேசுவின் வல்ல செயல் குறித்தும் போதனை குறித்தும் மக்கள் மகிழ்கிறார்கள்.

 

நாம் வைத்திருக்கும் மரபுகள், சட்டங்கள், முற்சார்பு எண்ணங்கள் அனைத்தும் நம் முன் நிற்கும் வலுவற்ற மனிதர்முன் வலுவிழந்து போக வேண்டும். எந்தச் சூழலிலும் மனிதரின் நலத்தை மட்டுமே நாம் விரும்ப வேண்டும்.

 

இன்றைய முதல் வாசகத்தில், ‘ஒருவருக்கொருவர் நன்மை செய்து பரிவு காட்டுங்கள்!’ என்று எபேசு நகரத் திருஅவைக்கு அறிவுரை வழங்குகிறார் பவுல். ‘இவருக்கு இதை நான் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்?’ என்று கேட்பது வியாபாரம். ‘இவருக்கு இதை நான் செய்யாவிட்டால் அவருக்கு என்ன நடக்கும்?’ என்று கேட்டு உடனடியாகச் செயலாற்றுதல் பரிவு.

 

நம் குடும்பத்தில், பணித்தளத்தில் மட்டுமல்ல, முன்பின் தெரியாத நபர்களின் நலம் விரும்புதல் – எண்ணமும் செயலும் – இன்று நாம் செய்யும் நற்செயலாக இருக்கட்டும்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Image courtesy: Author Unknown

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: