
இன்றைய இறைமொழி
வெள்ளி, 26 டிசம்பர் ’25
புனித ஸ்தேவான், முதல் மறைசாட்சி – விழா
திருத்தூதர் பணிகள் 6:8-10, 7:54-60. மத்தேயு 10:17-22
கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவுக்கு அடுத்த நாள் புனித ஸ்தேவான் நாள் எனக் கொண்டாடப்படுகிறது. திருஅவையின் முதல் மறைசாட்சியான திருத்தொண்டர் ஸ்தேவானை இன்றைய நாளில் நாம் நினைவுகூறுகிறோம். தொடக்கத் திருஅவையில் பந்தி பரிமாறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஏழு திருத்தொண்டர்களில் முதன்மையாக இருக்கிறவர் ஸ்தேவான். ‘ஸ்தெஃபானோஸ்’ என்றால் ‘மகுடம்’ என்பது பொருள். தெரிவுசெய்யப்பட்ட ஏழு திருத்தொண்டர்களும் ‘தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களாக’ இருக்கிறார்கள் (காண். திப 6:3). ஸ்தேவான், பிலிப்பு ஆகியோர் பற்றிய தகவல்கள் மட்டுமே திருத்தூதர் பணிகள் நூலில் தரப்பட்டுள்ளன.
திருத்தூதர் பணிகள் நூலின் ஆசிரியரான லூக்கா, ஸ்தேவானை இயேசுவின் நிழலாக முன்மொழிகிறார்: (அ) ‘மக்களிடையே அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வருகிறார்,’ (ஆ) ‘அவருடைய சொற்களை எதிர்த்து நிற்க அவருடைய எதிரிகளால் இயலவில்லை,’ (இ) ‘மக்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் அவருக்கு எதிராக கிளர்ந்தெழுகிறார்கள்,’ (ஈ) ‘தூய ஆவியாரின் வல்லமையைப் பெற்றவராக இருக்கிறார்,’ (உ) ‘எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்’ எனச் சொல்லி உயிர்விடுகிறார், (ஊ) ‘இந்தப் பாவத்தை இவர்கள்மேல் சுமத்தாதேயும்’ என்று இறக்குமுன் அனைவரையும் மன்னிக்கிறார்.
கிறிஸ்துவின் பிறப்பை நாம் பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடினோம். ஆனால், இப்படிக் கொண்டாடப்படுகிற கிறிஸ்து நிராகரிக்கப்பட்டு, கொலைசெய்யப்படுவார் என்பதை புனித ஸ்தேவான் திருநாள் அடையாளமாக நமக்குச் சொல்கிறது. மேலும் கிறிஸ்துவைப் பின்பற்றும் அனைவருக்கும் இதே நிலை ஏற்படும் என்பதும் இங்கே சொல்லப்படுகிறது.
(அ) மாசற்றோரின் துன்பம். நாம் செய்த பாவங்களால் நமக்குத் துன்பம் வருகிறது எனக் கற்பிக்கிறது இணைச்சட்ட இறையியல். ஆனால், மாசற்றோரின் துன்பத்தை இந்த இறையியலின் பின்புலத்தில் புரிந்துகொள்ள இயலாது. யோபு, இயேசு, ஸ்தேவான் போன்றோர் தங்களுடைய மாசற்ற நிலையில் துன்புறுகிறார்கள். துன்பம் என்பது அவர்கள்மேல் சுமத்தப்படுகிறது. மாசற்றோரின் துன்பம் இன்றுவரை நமக்குப் புதிராக இருக்கிறது.
(ஆ) திரும்பாத திடம். தான் மேற்கொண்ட தெரிவில் துன்பம் வந்தாலும், தான் எதிர்க்கப்பட்டாலும் திரும்பாத திடம் கொண்டவராக இருக்கிறார் ஸ்தேவான். கடவுள் மனித உரு ஏற்றாலும், மனித உரு ஏற்றலின் துன்பம் கண்டு, தாம் மீண்டும் கடவுளாக அவர் விரும்பவில்லை. திரும்பாத திடம் மனுவுருவாதலிலும் ஸ்தேவானின் மறைசாட்சியத்திலும் வெளிப்படுகிறது. நற்செய்தி வாசகத்தில் தம் சீடர்களுக்கு அறிவுரை தருகிற இயேசு, ‘இறுதிவரை மன உறுதியுடன் இருப்போர் மீட்கப்படுவர்’ என்கிறார். பவுலும் பர்னபாவும் இக்கோனியாவில் நம்பிக்கையாளர்களைச் சந்தித்தபோது, ‘நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்’ என்று கற்பிக்கிறார்கள். நம் சீடத்துவ வாழ்விலும் நாம் துன்பங்கள் அனுபவிக்கும்போது துணிவுடன் இருத்தல் வேண்டும்.
(இ) சான்று வாழ்வு. தான் பெற்றிருந்த அறிவு, ஞானம், ஆவியாரின் வல்லமை அனைத்தையும் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வதற்காகப் பயன்படுத்துகிறார் ஸ்தேவான். தன் ஆற்றல்களை மேலானவற்றுக்கு முதலீடு செய்த ஸ்தேவான் போல நாமும் நம் ஆற்றல்களைக் கடவுளுக்காகப் பயன்படுத்துதல் நலம்.
புனித ஸ்தேவான் நிழல்போல கிறிஸ்துவைப் பின்தொடர்ந்தார்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Source: Rev. Fr. Yesu Karunanidhi
Share: