
இன்றைய இறைமொழி
திங்கள், 27 ஜூலை 2026
பொதுக்காலம் 17-ஆம் வாரம்
எரே 13:1-11. மத் 13:31-35
‘துருப்பிடித்து அழிந்துபோவதை விட பயன்படுத்தப்பட்டுத் தேய்ந்து அழிந்து போவது நலம்’ என்று நாம் கேட்டிருப்போம். இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எரேமியா வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை விடுக்கிறார்.
நார்ப்பட்டாலான கச்சை ஒன்றை வாங்கிக்கொள்ளுமாறு இறைவாக்கினரைப் பணிக்கிறார் ஆண்டவர். இடுப்பில் அணியப்படக்கூடிய இக்கச்சை இஸ்ரயேல் மக்களைக் குறிக்கிறது. கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களுக்குமான நெருக்கத்தை இந்த உருவகம் எடுத்துச் சொல்கிறது. கடவுளோடு நெருக்கமாக இருந்த மக்கள் தங்களுடைய பிரமாணிக்கமின்மையாலும் உடன்படிக்கை மீறுதலாலும் கடவுளைவிட்டுத் தூரமாகச் செல்கிறார்கள். விளைவு, பயன்படுத்தாமல் விலக்கிவைக்கப்பட்ட கச்சை போல அவர்கள் துருப்பிடித்துப் பயனற்றுப் போகிறார்கள். ஆண்டவராகிய கடவுள் அவர்களை நாடுகடத்தப்படுமாறு விட்டுவிடுகிறார்.
நற்செய்தி வாசகத்திலும் இரண்டு உருவகங்களை நாம் காண்கிறோம். கடுகு விதை, புளிப்பு மாவு உருவகங்கள் வழியாக இயேசு விண்ணரசு பற்றிய மறையுண்மைகளை எடுத்துரைக்கிறார். விதையின் இயக்கத்தையும் புளிப்புமாவின் வேகத்தையும் யாரும் நிறுத்த முடியாது. அது போலவே விண்ணரசின் வளர்ச்சியையும் நிறுத்த முடியாது. அளவில் சிறியதாக இருந்தாலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வல்லது விண்ணரசு.
இன்று நாம் வாசிக்கும் மூன்று உருவகங்கள் நமக்குத் தரும் பொருள் எவை?
நாம் ஒவ்வொருவருமே கடவுளின் கைகளில் பயன்பாட்டுப் பொருளாக இருக்கிறோம். அவர் நமக்குக் கொடுத்துள்ள வாழ்வியல் நோக்கத்தை அறிவதும், பின்பற்றுவதும், செயல்படுத்துவதும் நம் வாழ்வின் இலக்காக அமையட்டும்.
நம் வாழ்வை, நேரத்தை, திறமைகளை முழுமையாகப் பயன்படுத்த முயற்சி செய்வோம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி
Source: Rev. Fr. Yesu Karunanidhi
Share: