இன்றைய இறைமொழி
சனி, 27 செப்டம்பர் ’25
பொதுக்காலம் 25-ஆம் வாரம், சனி
புனித வின்சென்ட் தே பவுல், மறைப்பணியாளர் – நினைவு
செக்கரியா 2:1-5, 10-11அ. லூக்கா 9:43ஆ-45
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் இறப்பை இரண்டாம் முறை முன்னறிவிக்கின்றார். ‘மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்’ என்று மிகவும் சுருக்கமாக இருக்கிறது இயேசுவின் முன்னறிவித்தல். தொடர்ந்து, இந்த வார்த்தைகள் சீடர்களிடம் ஏற்படுத்திய உணர்வலைகளையும் லூக்கா பதிவு செய்கின்றார்: ‘அவர்கள் புரிந்துகொள்ளவில்லை,’ ‘அவர்கள் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.’
நற்செய்தி வாசகத்திற்கு முந்தைய பகுதியில் இயேசு பேய் பிடித்த சிறுவனின் பிணியைப் போக்குகின்றார். அதைக் கண்ட மக்கள் கூட்டத்தினர், ‘இயேசு செய்ததைப் பார்த்து வியக்கின்றனர்.’ மக்கள் கூட்டத்தினரின் வியப்பு கண்டு சீடர்களும் பெருமிதம் அடைந்திருப்பார்கள். தங்கள் போதகர் வல்லமை உடையவர் என்றும், தங்கள் போதகருடன் இருப்பது தங்களுக்குப் பெருமை என்றும் நினைத்துக்கொண்டிருந்த வேளையில், அவர்களின் எண்ண ஓட்டங்களைத் திசைதிருப்புகின்றார் இயேசு.
இந்த நிகழ்வு மூன்று விடயங்களைக் கூறுகிறது:
இந்தப் போராட்டம் நம் வாழ்விலும் நடக்கின்றது. கடவுள் நமக்கு நற்காரியங்களைச் செய்யும்போதெல்லாம், அவருடைய உடனிருத்தலைக் கண்டு வியக்கின்ற நாம், நாம் எதிர்பார்க்கும் விதமாக வாழ்க்கை செல்லாத போது நாம் அவரை நம் வாழ்விலிருந்து வெளியேற்றவும், அவரைக் கடிந்துகொள்ளவும் நினைக்கின்றோம்.
மக்களின் வியப்பு கண்டு இயேசு மெய்மறந்து போகவில்லை. தன் வாழ்வின் இலக்கு மற்றும் இயக்கம் பற்றிய புரிதல் அவருக்குத் தெளிவாக இருந்தது. ஆகையால்தான், இதே மக்கள் தன்னைத் தங்கள் கரங்களில் ஏற்றுக் கொலை செய்வார்கள் என்று தெரிந்தாலும், எந்தவொரு எதிர்வினையும் ஆற்றாமல் அமைதி காக்கின்றார். வாழ்வின் அலைகள் நம்மைத் தாக்காத வண்ணம், நம் உணர்வுகளால் நாம் இழுத்துச் செல்லப்படாத வண்ணம் நாம் சமநிலையைக் காத்துக்கொள்தல் நலம்.
இயேசுவின் வார்த்தைகளைத் தாங்கள் புரிந்துகொள்ளவும் இல்லை, விளக்கம் கேட்கவும் இல்லை என்ற மனநிலையில் உள்ளார்கள் சீடர்கள். இது அவர்களின் மனக்குழப்பத்தைக் காட்டுகின்றது. ‘மக்களிடம் ஒப்புவிக்கப்படுவார்’ என்னும் இயேசுவின் வார்த்தைகளில் உள்ள ‘மக்களில்’ தாங்களும் ஒருவரோ என்ற குழப்பமும் அவர்களுக்கு எழுந்திருக்கலாம்.
இறைவன் ஒரே நேரத்தில் வியப்பையும் பயத்தையும் நமக்குத் தருகின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில், ‘நான் வந்து உங்கள் நடுவே குடிகொள்வேன். மகளே! ஆர்ப்பரி!’ என்கிறார் ஆண்டவராகிய கடவுள்.
இறைவனின் உடனிருப்பு நமக்கு மகிழ்ச்சி தருகின்றது – அவரை நம்மால் புரிந்துகொள்ள இயலவில்லை என்றாலும்!
இன்று புனித வின்சென்ட் தே பவுலை (1581-1660) நினைவுகூர்கிறோம். ‘பிறரன்புப் பணியின் திருத்தூதர்’ என அழைக்கப்படுகிற இவர் தன் வாழ்வு முழுவதையும் வறியோர்க்குப் பணியாற்றுவதிலும், நோயுற்றோர், கைவிடப்பட்டோர்க்குத் துணைநிற்பதிலும் அர்ப்பணித்தார். மறைத்தூதுப் பணிக்கான துறவற சபை, அன்பின் புதல்வியர் சபை என்னும் இரண்டு துறவு நிறுவனங்களைத் தோற்றுவித்தார். தாழ்ச்சிநிறை பணி இவரிடம் நாம் கற்கிற பாடம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: