• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

உள்ளவருக்குக் கொடுக்கப்படும்! இன்றைய இறைமொழி. வியாழன், 29 ஜனவரி ’26.

Thursday, January 29, 2026   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி

இன்றைய இறைமொழி
வியாழன், 29 ஜனவரி ’26
பொதுக்காலம் மூன்றாம் வாரம், வியாழன்
2 சாமு 7:18-19, 24-29. மாற் 4:21-25

 

உள்ளவருக்குக் கொடுக்கப்படும்!

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் மூன்று ஞானக் கூற்றுகளை வாசிக்கிறோம்: (அ) விளக்கு அதற்கென உரிய இடத்தில் வைக்கப்படும்போதுதான் அனைவருக்கும் பயன்தரும் – ஏனெனில், விளக்கு எரிவது தனக்காக அல்ல, மற்றவர்களுக்காக, மற்றவர்களின் பயன்பாட்டுக்காக. (ஆ) நாம் அளக்கிற அளவையைப் பொருத்தே வாழ்க்கை நமக்கு அளக்கிறது – நம் எண்ணங்களின் தன்மையைப் பொருத்தே, நம் செயல்களின் தரத்தைப் பொருத்தே வாழ்க்கை நமக்கு வெற்றியைத் திரும்பத் தருகிறது. (இ) நம்மிடம் இல்லாதவற்றைக் கணக்கிட்டுக்கொண்டிருப்பதை விட, உள்ளவற்றை அடையாளம் கண்டு அவற்றை பெருக்க முயற்சி செய்யும்போது நாம் கொண்டிருப்பவை பெருகிப் பலன் தரத் தொடங்குகின்றன.

 

மேற்காணும் மூன்று ஞானக் கூற்றுகளும் இன்றைய முதல் வாசகத்தில் தாவீது அரசரிடம் நிறைவேறுவதை நாம் காண்கிறோம்.

 

ஆண்டவராகிய கடவுள் தாவீதுடன் உடன்படிக்கை செய்துகொண்டபின்னர், ஆண்டவராகிய கடவுளின் திருமுன் வந்து நிற்கிற தாவீது செய்கிற இறைவேண்டலே இன்றைய முதல் வாசகம்.

 

தன் எளிய பின்புலத்தையும், ஆண்டவராகிய கடவுளின் அளப்பரிய செயல்களையும் இணைத்துப் பார்க்கிறார் தாவீது: ‘என் தலைவராம் ஆண்டவரே! இதுவரை நீர் என்னை வழிநடத்தி வந்தமைக்கு, நான் யார்? என் குடும்பம் யாது? இருப்பினும் … உம் திருமுன் இது சிறிதே … மனித வழக்கம் இதுவல்லவே!’

 

தான் ஆடு மேய்க்கும் நிலையில் அழைக்கப்பட்டாலும், அரசராக மாறியவுடன் அரசருக்குரிய நிலையில் தன் ஒளியை மக்கள் அனைவர்முன்னும் ஏற்றுகிறார் தாவீது. அனைத்திலும் ஆண்டவராகிய கடவுளின் குரலைக் கேட்டு அதன்படி செயலாற்றுகிறார். ஆண்டவரின் உடனிருப்பு அவருடைய வாழ்வில் மாற்றத்தைத் தருகிறது.

 

வாழ்க்கை நமக்கு அளித்துள்ள வரங்களையும் கொடைகளையும் எண்ணிப் பார்த்து, அவற்றுக்காக நன்றி கூறுதலும், அவற்றை முழுமையாகப் பயன்படுத்துதலும் நலம்!

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: