• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

கடவுளின் உடனிருப்பு. இன்றைய இறைமொழி. திங்கள், 29 செப்டம்பர் ’25.

Monday, September 29, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

கடவுளின் உடனிருப்பு கடவுளின் வல்லமை அதிதூதர்கள் மிக்கேல், கபிரியேல், இரபேல் அதிதூதர் மிக்கேல் அதிதூதர் கபிரியேல் அதிதூதர் இரபேல் மானிடமகன்-இயேசு நத்தனியேல் மலாக் எலோகிம் கடவுளுக்கு நிகர் யார் கடவுள் குணமாக்குகிறார் கடவுள் அனுபவம் ஆண்டவரின் ஆற்றல்

இன்றைய இறைமொழி
திங்கள், 29 செப்டம்பர் ’25
அதிதூதர்கள் மிக்கேல், கபிரியேல், இரபேல் – திருவிழா
தானியேல் 7:9-10, 13-14 அல்லது திருவெளிப்பாடு 12:7-12. யோவான் 1:47-51.

 

கடவுளின் உடனிருப்பு

 

அதற்கு இயேசு, ‘இதைவிட பெரியவற்றைக் காண்பீர். வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ என்று நத்தனியேலிடம் கூறினார். (யோவான் 1:51)

 

இன்று அதிதூதர்களான மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகியோரின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

 

வானதூதர்கள் பற்றிய நம்பிக்கை எப்படி உருவானது?

 

முதல் ஏற்பாட்டு நூல்களில் விடுதலைப்பயணம், நீதித்தலைவர்கள், தானியேல் போன்ற நூல்களில் அடிக்கடி வரும் ஒரு நபர் ‘மலாக் எலோகிம்’ (கடவுளின் தூதர்). ஆனால் ‘மலாக் எலோகிம்’ வானதூதர் அல்ல. முதல் ஏற்பாட்டு நூலின் ஆசிரியர்கள் கடவுள் என்ற பெயரை பயன்படுத்தாமல் சில நேரங்களில் ‘கடவுளின் பிரசன்னம்’ மற்றும் ‘கடவுளின் தூதர்’ என்னும் வார்த்தைகளை மரியாதை நிமித்தமாகப் பயன்படுத்தினர்.

 

முதன்முதலாக முதல் ஏற்பாட்டில் வானதூதர் என்ற சிந்தனை இஸ்ரயேல் மக்களின் பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பின்பே வந்தது. யூப்ரடிஸ், டைக்ரீஸ் நதியோரங்களில் வாழ்ந்த மக்கள் கடவுள் நம்பிக்கையை விட கடவுளின் தூதர்கள் மேல் நம்பிக்கை வைத்தனர். இறக்கும் நம் முன்னோர் அனைவரும் கடவுளின் தூதர்களாக மாறிவிடுகிறார்கள் என்பதும் அவர்களின் நம்பிக்கை. இந்தக் கடவுளின் தூதர்கள் கடவுளுக்கும், மனிதர்களுக்கும் இடையே தூது செல்பவர்கள். இவர்கள் மேலுலக்கும் மானிடர் உலகுக்கும் இடையே செல்பவர்கள், இரண்டையும் இணைப்பவர்கள்.

 

தூதர்கள் என்பவர்களின் தலைவர்களே அதிதூதர்கள்.

 

வானதூதர்களின் மேல் உள்ள நம்பிக்கை கிறித்தவ மதத்தில் மட்டுமல்ல, மத்திய கிழக்கில் பிறந்த அனைத்து மதங்களுமே வானதூதர்கள் இருப்பதாக நம்புகின்றன. கிறித்தவர்களுக்கு, அதுவும் ரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் மிக்கேல், கபிரியேல் மற்றும் ரபேல் என்னும் மூன்று அதிதூதர்கள் இருப்பதாக நம்புகிறார்கள். ஆனால் ‘ஆர்த்தடாக்ஸ்’ எனப்படும் கிறித்தவர்கள் மிக்கேல், கபிரியேல், ரபேல், உரியேல், செயால்தியேல், யெகுதியேல், பராக்கியேல் மற்றும் யெராமியேல் என்னும் எட்டு அதிதூதர்கள் இருப்பதாக நம்புகிறார்கள்.

 

யூத மரபில் ஏழும், இசுலாமில் நான்கும், ஸோராஸ்டிரியத்தில் ஏழும் கடவுளின் அதிதூதர்களின் எண்ணிக்கை.

 

மிக்கேல் என்றால் ‘மிக்கா ஏல்’, அதாவது ‘கடவுளுக்கு நிகர் யார்?’ என்பது பொருள். பாரம்பரியமாக வலது கையில் ஒரு அம்பை வைத்து லூசிஃபர் என்னும் சாத்தானின் தலைவனை தன் காலடியில் போட்டிருப்பவராகவும், மற்றொரு கையில் சில நேரங்களில் தராசும், சில நேரங்களில் ஒலிவக் கிளையும் ஏந்தியவராகச் சித்தரிக்கப்படுகிறார். யாக்கோபு 1:9, தானியேல் 10:13, 12:1 மற்றும் திவெ 12:7 ஆகிய இடங்களில் இவரைப் பற்றிய குறிப்புகள் உண்டு.

 

கபிரியேல் என்றால் ‘கபார் ஏல்’, அதாவது ‘கடவுளின் வல்லமை’. ‘கடவுள் வல்லமையானவர்’ என்றும் மொழிபெயர்க்கலாம். மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளில் வரும் இயேசுவின் பிறப்பையொட்டிய நிகழ்வுகளில் சக்கரியாவுக்கு, மரியாவுக்கு, யோசேப்புக்கு மற்றும் வானதூதர்களுக்கு ‘மங்கள வார்த்தை’ சொல்பவர் இவரே.

 

ரபேல் என்றால் ‘ரஃபா ஏல்’, அதாவது ‘கடவுள் குணமாக்குகிறார்’ என்பது பொருள். தோபித்து நூலில் (3:17, 12:15) தோபியாவின் கண்ணுக்குப் பார்வை அளிப்பவராக, தோபித்தின் மனைவி சாராவைப் பிடித்திருந்த பேயை வெளியேற்றுபவராக வருகிறார். தோபித்தின் பயணத்தில் உடனிருப்பவர் இவரே.

 

நாம் அன்பு செய்யும் அனைவருமே நம்மைச் சுற்றியிருக்கும் தூதர்கள் தாம். நாம் முன்பின் பார்த்திராத கடவுளை நமக்குக் காட்டுபவர்கள் இவர்களே. இவர்களே நமக்கு கடவுளாகவும், கடவுளின் வல்லமையாகவும், குணமாக்குபவர்களாகவும் நம் அருகில் வருகிறார்கள்.

 

இறைவனுக்கும், மனிதருக்கும் இடைப்பட்டவர்கள் இவர்கள். இரண்டு இயல்புகளையும் உடையவர்கள் இவர்கள்.

 

கடவுளைப் போல காலத்தையும், இடத்தையும் கடந்து நின்றாலும், மனிதர்களைப் போல காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டவர்கள் இவர்கள்.

 

என்னைப் பொறுத்தவரையில் நம் குடும்பங்களில் அல்லது நம் நண்பர்கள் வட்டத்தில் இறந்த நம் முன்னோர்களும் காவல்தூதர்களே. இவர்கள் எந்நேரமும் நம்மைச் சுற்றி சுற்றி வருகிறார்கள். நாம் நம் அறையில் தனியாக இருந்தாலும், நெடுந்தூரம் பயணம் செய்தாலும் இவர்கள் அருகில் இருக்கிறார்கள்.

 

ஆக, அதிதூதர்கள் தரும் முதல் செய்தி ‘உடனிருப்பு.’

 

நாம் தனிமையில் இல்லை. அவர்கள் என்றும் நம் உடனிருக்கிறார்கள்.

 

இரண்டாவது, நாமும் இந்த அதிதூதர்கள் போல பிறர்வாழ்வில் உடனிருக்க நம்மை அழைக்கிறார்கள்.

 

இன்று பல நேரங்களில் நமக்கு எல்லாம் இருப்பது போல இருக்கும். ஆனால், ஏதோ ஒரு தனிமை கன்னத்தில் அறைந்துகொண்டே இருக்கும். நான் தனிமையாக இருக்கிறேன் என புலம்புவதை விட்டு, அடுத்தவரும் அப்படித்தானே நினைத்துக் கொண்டிருப்பார் என அவரின் அருகில் சென்றால் நாமும் அதிதூதர்களே.

 

‘கடவுளின் தூதர் ஏறுவதையும் இறங்குவதையும்’ காட்சியில் காண்கிறார் யாக்கோபு (காண். தொடக்கநூல் 28:12).

 

தன் அண்ணன் ஏசாவை ஏமாற்றி தலைப்பேறு உரிமை மற்றும் தந்தையின் ஆசியைப் பெற்றுக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் யாக்கோபு பெத்தேலில் கனவு காண்கின்றார். அந்தக் கனவில்தான் இந்தக் காட்சியைக் காண்கிறார். அதாவது, தன் வாழ்வின் தனிமையில்தான் கடவுள் அனுபவம் பெறுகிறார் யாக்கோபு.

 

‘நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும் உனக்கு நான் காவலாயிருந்து இந்நாட்டிற்கு திரும்பிவரச் செய்வேன்’ என்று கடவுள் அவருக்கு வாக்குறுதி கொடுப்பதும் இக்காட்சியில்தான்.

 

ஆக, முதல் ஏற்பாட்டிலும் இரண்டாம் ஏற்பாட்டிலும் கடவுளின் தூதர்கள் பற்றிய செய்தி ‘கடவுளின் உடனிருப்பை’ நமக்கு உறுதி செய்கிறது.

 

இன்று ஒட்டுமொத்தமாக நம் எண்ணத்தில் குறைவுபடுவது இந்த உடனிருப்பு உணர்வே. இதை இன்றைய திருநாள் நிறைவுசெய்வதாக.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: