
இன்றைய இறைமொழி
திங்கள், 29 டிசம்பர் ‘25
கிறிஸ்து பிறப்பின் எண்கிழமை 5-ஆம் நாள்
1 யோவான் 2:3-11. லூக்கா 2:22-35
கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் இன்று நாம் சந்திக்கும் கதைமாந்தர் சிமியோன்.
இயேசுவின் பெற்றோர்கள் குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க எருசலேம் வருகின்றனர்.
இயேசுவின் பெற்றோர்களின் எளிமையான, ஏழ்மையான பின்புலத்தைக் காட்டுவதற்காக “இரு மாடப்புறாக்களை அல்லது புறாக்குஞ்சுகளை” பலியாகக் கொடுப்பதாகப் பதிவு செய்கிறார் லூக்கா. கடவுளின் மகன் கடவுளுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டபோது அவர் தன் ஏழ்மையால் கடைசி வரிசையில்தான் நின்றிருக்க வேண்டும்.
இந்த நேரத்தில் தூய ஆவியின் தூண்டுதலால் சிமியோன் கோவிலுக்கு வருகின்றார். இவர் தன் ஆண்டவரோடு இணைப்பில் இருந்தது ஆச்சர்யமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் கோவிலுக்குள் 100-க்கு மேல் குழந்தைகள் கொண்டுவரப்படுவார்கள். அப்படி இருந்தும் அந்த ஒரு நாள் அவர் தூண்டப்பட்டது எப்படி? அந்த ஒரு குழந்தையை மட்டும் மெசியாவாகக் கண்டுகொண்டது எப்படி?
வந்தவர் குழந்தையைத் தன் கையில் ஏந்துகிறார். குழந்தையைக் கைகளில் தூக்குவது ஒரு கலை.
இன்று நான் என் உள்ளத்தில் இருக்கும் ஆவியின் குரலைக் கேட்கத் தடையாக இருக்கின்ற இரைச்சல் எது? காத்திருப்பவர்கள் மட்டுமே கண்டுகொள்வார்கள்.
தன் உள்ளுணர்வால் ஆண்டவரின் மெசியாவைக் கண்டுகொண்டவர். மெசியாவைக் கண்டவுடன் அவருடைய தேடல் நிறைவுபெறுகிறது. அவருடைய எதிர்பார்ப்பு முடிவுக்கு வருகிறது.காத்திருத்தல் நிறைவேறியவுடன் விடைபெற விழைகின்றார்.
விடைபெறுதல் ஒரு சோகமான அனுபவம். ஆனால், விடைபெறல்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. நம் வாழ்வில் ‘நிறைவு’ என்ற ஓர் உணர்வை நாம் பெற்றுக்கொள்ள சிமியோன் நமக்கு அழைப்பு விடுக்கின்றார். ஒரு குழந்தையில் மெசியாவைக் கண்டார் சிமியோன். அந்தக் குழந்தையைக் கையில் ஏந்தினார்.
கையில் ஏந்தியவர், அந்தச் சின்னக் குழந்தையின் பிஞ்சு விரல் விலக்கி விடைபெறுகின்றார். மெசியாவையும் பற்றிக்கொள்ள விரும்பவில்லை சிமியோன். தான் போவதற்கு முன் தனக்குக் கொடுக்கப்பட்ட பணியை நிறைவு செய்கின்றார். பற்றுகள் பல நேரங்களில் நம் வாழ்வின் தொற்றுகளாக மாற வாய்ப்பு உள்ளது.பற்றுகள் தவிர்த்தல் நலம். ஆனால், அதற்கு அசாத்திய துணிச்சலும் மனத்திடமும் தேவை.
தன் வாழ்வில் தனியாhகக் காத்துக்கிடந்த சிமியோன் சற்று நேரம் அந்தக் குழந்தையின் பிஞ்சு விரல்களைப் பிடித்தார். விரல்களின் இறுக்கமும் நெருக்கமும் அவருக்குக் கிறக்கம் தந்தாலும், விரல்களை விட்டு விடைபெறுகின்றார். பற்றுகள் விடும்போது மனம் அமைதி பெறுகின்றது. ஆனால், அவற்றை விட்டுவிட்டால் என்ன ஆகும்? என்று பதைபதைத்து மனம் அமைதியை இழக்கின்றது.
இன்றைய இரண்டு வாசகங்களிலும், ‘ஒளி’ என்னும் உருவகம் முதன்மையாக இருக்கிறது.
‘ஒளியில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் இருளில்தான் இருக்கின்றனர். தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்பு கொள்வோர் ஒளியில் நிலைத்திருக்கின்றனர்’ என்று முதல் வாசகத்தில் திருத்தூதர் யோவான், ஒளியில் நிலைத்திருப்பது என்பது அன்பு செய்வதைக் குறிப்பதாக முன்மொழிகின்றார்.
நற்செய்தி வாசகத்தில், குழந்தை இயேசுவை எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கும் நிகழ்வில், ‘மக்கள் அனைவரும் காணுமாறு, நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி. இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை’ என்கிறார் சிமியோன். இங்கே, ஒளி என்பது இயேசுவையும் அவர் தருகின்ற மீட்பையும் குறிக்கிறது.
வெறுப்பு என்பது இருள் என்றால், அன்பு என்பது ஒளி.
இன்றைய நாள் நமக்கு விடுக்கும் பாடங்கள் எவை?
(அ) காத்திருத்தல் – பொறுமையோடும் எதிர்நோக்கோடும்!
(ஆ) மெசியா தரும் மகிழ்ச்சியை கைகளிலும் உள்ளத்திலும் ஏந்துதல்.
(இ) ஒருவர் மற்றவர்மேல் அன்பு காட்டி ஒளியில் நடத்தல்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Source: Rev. Fr. Yesu Karunanidhi
Share: