தீபகத்திலிருந்து இறையாசீர்!
இன்றைய உலகில், சுதந்திரம் என்பது தான் விரும்பியவற்றை செய்தல் என்று தவறாக புரிந்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் அன்னை மரியாள் உண்மையான கிறிஸ்தவ சுதந்திரத்தின் ஒளியாக திகழ்கின்றார். அதாவது கடவுளுக்காக "ஆம்" எனச் சொல்லும் சுதந்திரம், அன்பு, அர்ப்பணம் மற்றும் பிறருக்காக பணி செய்து வாழும் சுதந்திரம்.
கபிரியேல் தூதர் நாசரேத்தில் வாழும் மரியாள் என்ற கன்னியிடம் வந்து, "அருள் மிகப் பெற்றவரே வாழ்க" என்று வாழ்த்தி கடவுளின் தாயாகும் திட்டத்தை, அறிவித்தபோது கன்னி மரியாள் "இதோ ஆண்டவரின் அடிமை. உமது வார்த்தையின்படி எனக்கு ஆகட்டும்" (லூக்.1:38) என்ற அவரின் "ஆம்" "FIAT" என்பது அடிமைத்தனம் அல்ல. மாறாக அது ஒரு வீரமான, செயல்படும் சுதந்திரம். இது நம்பிக்கையுடன் கடவுளின் திட்டத்தில் பங்கேற்கும் சுதந்திரம்.
எழுபத்தெட்டாவது (78) ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நம் நாட்டில், இளைஞர்களுக்கு அன்னை மரியாள் உண்மையான சுதந்திரம் என்பது "தான்" விரும்பியவற்றையெல்லாம் செய்வது என்பதல்ல. மாறாக நாம் செய்யும் ஒவ்வொரு செயல்பாடுகளையும் தீர சிந்தித்து, தேர்வு செய்து, நற்செயல்களில் ஈடுபடுவதில் உள்ளது என நமக்கு கற்பிக்கின்றார். இந்த செயல்பாடுகள் நம்மை புனிதராகவும், பிறருக்கு உதவி புரிவதிலும் அதிலும் சிறப்பாக பிறருக்கு வாழ்வளிக்கவும் இட்டுச் செல்ல வேண்டும்.
கிறிஸ்தவ குடும்பங்களில் வாழும் நமக்கு சுதந்திர அன்னை மரியாள், "சுதந்திரம்" என்பது குடும்பத்தில் நம்பிக்கையுடன் வாழ்வது, எதிர்நோக்குடன் அன்றாட கடமைகளைச் செய்வது, எந்த துன்பம்வரினும் மன உறுதியுடன் எதிர்க்கொள்வது என்கின்ற கிறிஸ்துவ பண்புகளில் அதிலும் சிறப்பாக, மகிழ்வுடனும், பொறுப்புடனும் சவால்களை எதிர்க்கொள்வதிலும் நம் சுதந்திரம் இருக்கின்றது என கற்பிக்கின்றார். சிலுவையின் அடியில் அன்னை மரியாள் நின்று, அன்பில் பிறந்த சுதந்திரம் துன்பத்திலும் நிலைத்து நிற்கும் என்பதை யோவான் 19: 25ல் நமக்கு கற்றுக் கொடுக்கின்றார்.
புனிதர் இரண்டாம் ஜான்பால், அன்னை மரியாளைப் பற்றி குறிப்பிடும்போது. "மரியாள் சுதந்திரத்தின் மிக உயர்ந்த வெளிப்பாடு எனவும், ஒரு பெண்ணாக சுதந்திரம் என்பது கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, அவரின் விருப்பப்படி நடப்பதே" என்று தெளிவாக வாழ்ந்துக் காட்டியுள்ளார் எனக் கூறுகின்றார்.
இளைஞர்களுக்கும். குடும்பங்களுக்கும் இந்த 'சுதந்திர நாளில்" நாம் கற்றுக் கொடுக்க வேண்டியது, அன்பும், உண்மையும், நீதியும், சமத்துவமும் நிறைந்த வாழ்வு ஒன்றே உண்மையான சுதந்திரம் என்று கற்பிப்போம். அதன்படி வாழ்வோம்.
என்றும் அன்புடன்
அருட்பணி. ஜேசுதாஸ் ச.ச
இயக்குநர் -தீபகம்