தீபகத்திலிருந்து இறையாசீர்!
நோன்புக் காலம் என்பது உணவைத் தவிர்ப்பதற்கான காலமல்ல; அது உள்ளத்தை மாற்றும் புனிதப் பயணம். இது “மனமாற்றத்திற்கான காலம், மீட்பின் காலம்”. இதுவே தகுந்த காலம் இன்றே மீட்பு நாள் (2 கொரி 6:2) என்று திருத்தூதர் பவுல் சொல்வதை திருத்தந்தை பிரான்சிஸ் நமக்கு நினைவூட்டுகிறார். நோன்பு என்பது உறவுகளையும் குடும்பத்தையும் புதுப்பிக்கும் சிறந்த வழியாக அமையும் என்பதை நமக்குத் தெளிவுப்படுத்துகிறார்.
திருத்தந்தை பிரான்சிஸ் கூறுவதுபோல, உண்மையான நோன்பு என்பது சாப்பிடாமல் இருப்பதுமட்டுமல்ல, நமது வார்த்தையாலும் உள்ளத்தளவிலும் பிறரின் மனதைக் காயப்படுத்தாமல் இருப்பதாகும். காயப்படுத்தும் வார்த்தைகளிலிருந்து விலகி அன்பான சொற்களைப் பேசுவதும், கோபத்தைத் தவிர்த்து பொறுமையை வளர்ப்பதும், பிரிவினையைத் தவிர்த்து ஒற்றுமையைத் தழுவுவதுமே கடவுளுக்குப் பிரியமான நோன்பு.
இவ்வகை நோன்பு ஒரு வாழ்க்கை மறைக்கல்வி. குடும்பத்தில் குறை கூறுவதை கைவிட்டு நன்றியுணர்வை வளர்க்கும்போதும், கசப்புணர்வை மறந்து அமைதியை வளர்க்கும்போதும், நோன்புக் காலம் கிறிஸ்தவ வாழ்வின் பள்ளியாக மாறுகிறது.
இன்றைய உலகில் மனஅழுத்தங்கள், கவலைகள், சோதனைகளுக்கு நடுவில், இன்னலுறும் குடும்பங்கள் கடவுளின்மீது நம்பிக்கை வைக்க அழைக்கப்படுகின்றன. இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு முதல் மறைக்கல்வி ஆசிரியர்களாக மாறுகிறார்கள்.
இறைவேண்டல், நோன்பு, தர்மம்: இவை ஒன்றோடொன்று இணைந்தவை. இவை நம்மை ஒற்றுமை, இரக்கம், சமூக அன்பு ஆகியவற்றை நோக்கி அழைத்துச் செல்கின்றன. திருத்தந்தை பிரான்சிஸ் கூறுவதுபோல, நோன்பு நம்மை சுயநலத்திலிருந்து விடுவித்து, ஏழைகள் மற்றும் துன்புறுவோரிடம் நட்புறவுக்கொள்ள வழி வகுக்கிறது.
இந்த நோன்புக் காலத்தில் இயேசு நம்மை தீய பழக்கவழக்கங்களை விட்டுவிட்டு நல்ல மதிப்பீடுகளை வளர்க்க அழைக்கிறார்.
ஏனெனில் இயேசு நம் இதயத்தை விரும்புகிறார். இந்த நோன்பு நம்மை இயேசுவின் நண்பர்களாகவும், மற்றவர்களுக்கு ஒளியாகவும் மாற்றுகிறது.
மேனாள் திருத்தந்தை பிரான்சிஸ் கூறுவது போல, "குடும்பமே முதல் திருஅவை அதனால் நோன்புக் காலம் திருஅவையில் மட்டுமல்ல, வீட்டிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
இந்த நோன்புக் காலத்தில், நமது நோன்பு அன்பின் பயணமாக மாறட்டும். இந்நோன்பு நம்பிக்கையை புதுப்பித்து, குழந்தைகளை, இளைஞர்களை, குடும்பங்களை, நற்செய்தி மதிப்பீடுகளில் வேரூன்றச் செய்யட்டும். இந்த அன்பின் (நோன்பின்) பயணம், உயிர்ப்பின் திருநாளுக்கான தயாரிப்பாக மட்டுமல்லாமல், உயிர்த்த மக்களாய், உலகிற்கு ஒளித்தருபவர்களாக நம்மை மாற்றும்.
என்றும் அன்புடன்
அருட்பணி. ஜேசுதாஸ் ச.ச
இயக்குநர்-தீபகம்